டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம் - அரியானா எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்


டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம் - அரியானா எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 6 Aug 2021 12:28 AM GMT (Updated: 2021-08-06T05:58:42+05:30)

புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து, டெல்லியில் நேற்று நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டு அரியானா எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தலைநகர் டெல்லியில் கடந்த பல மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு பல்வேறு மாநில விவசாயிகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதன்படி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று நேரில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் ரெயில்கள் மூலம் நேற்று காலை டெல்லிக்கு வந்து சேர்ந்தனர். டெல்லி ரெயில் நிலையத்தின் முன்பு இருந்து பாரம்பரிய வேட்டி-சட்டையுடன் அவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஆனால் சிறிது தூரத்தில் போலீசாரும், துணை ராணுவப்படையினரும் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். சாலையில் மேலும் முன்னேற முடியாதபடிக்கு தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இதனைத்தொடர்ந்து விவசாயிகள் சிறிதுநேரம் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அக்கட்சி எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், நடராஜன், சிவதாசன் (கேரளா), தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம், தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் கே.பி.பெருமாள், துணைத்தலைவர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு விவசாயிகள் பஸ்களில் ஏற்றப்பட்டு, டெல்லி-அரியானா எல்லையில் உள்ள சிங்கு பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு ஏற்கனவே போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன் சேர்ந்து இவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒருவாரம் அங்கு தங்கியிருந்து போராடப்போவதாக தமிழக விவசாயிகள் தெரிவித்தனர்.

முன்னதாக கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

“விவசாயிகளின் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை மோடி அரசு நிறைவேற்றாததால் நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியிலும் போராட்டம் நடந்து வருகிறது. இங்கே வந்திருக்கிற விவசாயிகளை மிரட்டுகிற வகையில் ஆயிரக்கணக்கான போலீசாரை குவித்து நடக்க விடாமல், உட்கார விடாமல், நிற்கக்கூட விடாமல் விரட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் விவசாயிகள் அஞ்சப்போவது இல்லை. இந்த சட்டங்கள் கிழித்து எறியப்படும்வரை போராட்டம் ஓயாது” என்று கூறினார்.

Next Story