கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி மாதம் 18 கோடியாக உயர்வு


கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி மாதம் 18 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 6 Aug 2021 7:27 PM GMT (Updated: 6 Aug 2021 7:27 PM GMT)

கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளின் உற்பத்தியை மாதம் 18 கோடியாக உயர்த்தி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சுகாதார ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் அளித்த பதிலில் கூறி இருப்பதாவது:-

ஜனவரி 16-ந்தேதி முதல் ஆகஸ்டு 5-ந் தேதி வரையில், புனே சீரம் நிறுவனம் 44.42 கோடி தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது.

இதே கால கட்டத்தில் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் 6.82 கோடி கோவேக்சின் தடுப்பூசிகளை வினியோகித்து இருக்கிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியின் மாதாந்திர உற்பத்தி அளவு 11 கோடியில் இருந்து 12 கோடிக்கும் மேலாக உயர்த்தப்பட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி 2.5 கோடியில் இருந்து 5.8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. (இரு நிறுவனங்களின் மாதாந்திர கூட்டு உற்பத்தி சுமார் 18 கோடி ஆகும்.) உற்பத்தி நிறுவனங்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளன.

மேலும், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க ஏற்ற வகையில், அவற்றுக்கு விரைவான ஒப்புதல் அளிப்பதற்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைக்கும், ஒப்புதலுக்கும் விரைவு செயல்முறை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்திக்கும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி வினியோக ஆர்டர்களின் பேரில், புனே இந்திய சீரம் நிறுவனத்துக்கும், ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் மத்திய அரசு முன்கூட்டியே நிதி உதவி அளித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்களவையில் எழுப்பப்பட்ட மேலும் சில கேள்விகளுக்கு சுகாதார ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் எழுத்து மூலம் அளித்த பதில்களில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்:-

* இந்தியாவில் தனியார் ஆஸ்பத்திரிகள் சார்பில் கடந்த 2-ந் தேதி வரையில் 3.56 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அவை அரசு தடுப்பூசி மையங்களுக்கு மறு ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.

* இந்தியாவில் இதுவரையில் உருமாறிய கொரோனா வைரசான டெல்டா பிளஸ் வைரஸ் கடந்த 4-ந் தேதி வரையில் 83 பேருக்கு பாதித்துள்ளது. மராட்டியத்தில் 33 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 11 பேருக்கும், தமிழ்நாட்டில் 10 பேருக்கும் இந்த வைரஸ் பாதித்துள்ளது.

இவ்வாறு சுகாதார ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் தெரிவித்துள்ளார்.

Next Story