இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏறுமுகம் ஒரே நாளில் 44,643 பேருக்கு தொற்று உறுதி


இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏறுமுகம் ஒரே நாளில் 44,643 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 6 Aug 2021 7:33 PM GMT (Updated: 6 Aug 2021 7:33 PM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்கிறது. நேற்று ஒரே நாளில் 44 ஆயிரத்து 643 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

புதுடெல்லி,

கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்த இந்தியா, இரண்டாவது அலையை எதிர்த்து இன்னும் தனது நெடிய போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தினசரி தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்கிறது.

நேற்று ஒரே நாளில் மேலும் 44 ஆயிரத்து 643 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 18 லட்சத்து 56 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 16 லட்சத்து 40 ஆயிரத்து 287 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. தினசரி பாதிப்பு விகிதம் 2.72 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 2.41 சதவீதமாகவும் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

நேற்று முன்தினம் கொரோனாவில் இருந்து மீளமுடியாமல் 533 பேர் பலியாகினர். நேற்று இது 500-க்கு கீழே வந்தது. காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 464 பேர் மட்டுமே இறந்தனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 26 ஆயிரத்து 754 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் நேற்று மராட்டியத்தில் 120 பேரும், கேரளாவில் 117 பேரும், ஒடிசாவில் 68 பேரும் இறந்தனர்.

இறப்பு விகிதம் 1.34 சதவீதமாக இன்னும் நீடிக்கிறது.

கொரோனா உயிரிழப்பில் இருந்து நேற்றும் கூட 12 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தப்பின.

அவை, அந்தமான் நிகோபார், அருணாசலபிரதேசம், பீகார், சண்டிகார், தத்ராநகர்ஹவேலி, டாமன் டையு, குஜராத், ஜார்கண்ட், லடாக், லட்சத்தீவு, புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகும்.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து 41 ஆயிரத்து 96 பேர் மீண்டு, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதன்மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியோர் எண்ணிக்கை 3 கோடியே 10 லட்சத்து 15 ஆயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளது.

மீட்பு விகிதம் 97.36 சதவீதமாக உள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நேற்றும் கூட இந்த எண்ணிக்கையில் 3,083 உயர்ந்துள்ளது. இதையடுத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 14 ஆயிரத்து 159 ஆக இருந்தது.

இது மொத்த பாதிப்பில் 1.30 சதவீதம் ஆகும்.

3-வது அலையில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதோடு, முககவசம் அணிதல், கைச்சுத்தம் பராமரித்தல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்லாதிருத்தல் ஆகியவற்றை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Next Story