விளையாட்டுத்துறையின் மிகப்பெரிய விருதான ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருது, ‘தயான் சந்த்’ விருது என பெயர் மாற்றம்


விளையாட்டுத்துறையின் மிகப்பெரிய விருதான ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருது, ‘தயான் சந்த்’ விருது என பெயர் மாற்றம்
x
தினத்தந்தி 7 Aug 2021 1:41 AM GMT (Updated: 2021-08-07T07:11:22+05:30)

இந்தியாவில் விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் கவுரவமிக்க விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, இனிமேல் மேஜர் தயான் சந்த் விருது என அழைக்கப்படும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.

புதுடெல்லி,

இந்தியாவில் ஆக்கி விளையாட்டின் பிதாமகனாக கருதப்படுபவர், மேஜர் தயான் சந்த். உலக அரங்கில் இந்திய ஆக்கி அணி பல்லாண்டுகள் வெற்றி நடை போட காரணமான தயான் சந்தின் பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந்தேதியை இந்தியா, தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வருகிறது.

இந்தநிலையில், இந்திய விளையாட்டுத்துறையில் உயரிய சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது. இந்திய விளையாட்டுத்துறையின் உயரிய விருதான இது, ரூ.25 லட்சம் பரிசுத்தொகை ெகாண்டதாகும்.

இந்த விருதின் பெயரை தற்போது மேஜர் தயான் சந்த் விருது என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இந்த தகவலை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

கேல் ரத்னா விருதின் பெயரை தயான் சந்த் விருது என பெயர் மாற்ற வேண்டும் என நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், கேல் ரத்னா விருது இனிமேல் ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது’ என அழைக்கப்படும்.

இந்தியாவுக்கு பெருமையையும், கவுரவத்தையும் தேடித்தந்த முன்னணி விளையாட்டு வீரர்களில், தயான் சந்தும் ஒருவர். அந்தவகையில் நாட்டின் உயரிய விளையாட்டுத்துறை விருதுக்கு அவருடையை பெயரை சூட்டுவது மிகவும் பொருத்தமானது.

இவ்வாறு பிரதமர் ேமாடி கூறியிருந்தார்.

இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் ஆக்கி அணி நீண்ட காலத்துக்குப்பிறகு ஒலிம்பிக்கில் சாதித்துள்ள இந்த தருணத்தில், உயரிய விளையாட்டு விருதுக்கு ஆக்கி ஜாம்பவானின் பெயர் சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணிகளின் சிறப்பான செயல்பாட்டை பிரதமர் மோடியும் பாராட்டி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணியின் மிகச்சிறந்த செயல்திறன் நமது ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமையை அளித்துள்ளது. இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் வளர்ந்து வரும் விளையாட்டு மீது ஒரு புதிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இது வரும் காலத்துக்கு ஒரு மிகப்பெரிய சாதகமான அடையாளம் ஆகும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Next Story