மக்களவையில் முன்தேதியிட்டு வரி வசூலிக்கும் முறையை ரத்து செய்யும் மசோதா நிறைவேறியது


மக்களவையில் முன்தேதியிட்டு வரி வசூலிக்கும் முறையை ரத்து செய்யும் மசோதா நிறைவேறியது
x
தினத்தந்தி 7 Aug 2021 1:46 AM GMT (Updated: 7 Aug 2021 1:46 AM GMT)

வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து முன்தேதியிட்டு வரி வசூலிக்கும் முறையை ரத்து செய்வதற்கான மசோதா, மக்களவையில் நிறைவேறியது.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியவுடன், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவிகுமாருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா, சபையின் சார்பில் பாராட்டு தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து அவர் கேள்வி நேரத்தை தொடங்கினார். உடனே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபையின் மையப்பகுதிக்கு சென்றனர். ‘பெகாசஸ்’ உளவு விவகாரம், வேளாண் சட்டங்கள் ஆகியவை பற்றி விவாதிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பத் தொடங்கினர்.

கையில் பதாகைகளையும் ஏந்தி இருந்தனர். அவர்களின் கூச்சலுக்கிடையே கேள்வி நேரம் நடத்தப்பட்டது. இருக்கைக்கு திரும்புமாறு அவ்வப்போது அவர்களிடம் சபாநாயகர் கூறிக்கொண்டு இருந்தார். 20 நிமிடம் கேள்வி நேரம் நடந்தநிலையில், சபையை பகல் 12 மணிவரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

பகல் 12 மணிக்கு சபை மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்தனர். அறிக்கைகள் தாக்கலுக்கு பிறகு, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வரிவிதிப்பு சட்டங்கள் திருத்த மசோதாவை பரிசீலனைக்கு முன்வைத்தார். இந்தியாவில் உள்ள தங்களது சொத்துகளை மறைமுகமாக கைமாற்றிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன்தேதியிட்டு மூலதன ஆதாய வரி வசூலிக்கும் முறையை ரத்து செய்வதற்கும், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட வரியை திருப்பிச் செலுத்துவதற்கும் இம்மசோதா வகை செய்கிறது.

மசோதா மீது நிர்மலா சீதராமன் சிறிது நேரம் பேசினார். பிறகு விவாதம் இல்லாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், லடாக்கில் மத்திய பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மத்திய பல்கலைக்கழக திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அந்த மசோதாவும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

அதே சமயத்தில் கூச்சல்-குழப்பம் நீடித்ததால், சபையை நடத்திக்கொண்டிருந்த ராஜேந்திர அகர்வால், சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்து உத்தரவிட்டார். மீண்டும் திங்கட்கிழமை சபை கூடுகிறது.

மாநிலங்களவை நேற்று கூடியதும், அமளி காரணமாக பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், சபை மீண்டும் கூடியபோது, சில மத்திய மந்திரிகள் அறிக்கை தாக்கல் செய்வதற்கு வராத பிரச்சினையை காங்கிரஸ் மீண்டும் எழுப்பியது. இதை எழுப்பிய ஆனந்த் சர்மா, சில மத்திய மந்திரிகள் வராமல் இருப்பது சபையை அவமதிக்கும் செயல் என்றும், இதற்கு சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்றும் அவர் கேட்டார்.

இதைத்தொடர்ந்து அமளி காரணமாக, சபை திங்கட்கிழமை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Next Story