காஷ்மீரில் 45 இடங்களில் 2வது நாளாக என்.ஐ.ஏ. அதிரடி சோதனை


காஷ்மீரில் 45 இடங்களில் 2வது நாளாக என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
x
தினத்தந்தி 8 Aug 2021 9:57 AM GMT (Updated: 2021-08-08T15:27:13+05:30)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்கில் என்.ஐ.ஏ. 2வது நாளாக 45 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.


ஜம்மு,

நாட்டில் சுதந்திர தினம் நெருங்கி வரும் சூழலில் பயங்கரவாத தாக்குதல் பற்றி உளவு துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.  இதனால், டெல்லி, காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி வழங்கிய வழக்குடன் தொடர்புடைய, 15 மாவட்டங்களை சேர்ந்த 45 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) நேற்று சோதனை நடத்தியது.  இந்த சோதனை இன்று 2வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

இதேபோன்று, மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்புக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்தது.  ஆனால் இந்த அமைப்பின் செயல்பாடுகள் காஷ்மீரில் தடையை மீறி நடந்து கொண்டிருந்தன.  பாகிஸ்தான் சார்பு மற்றும் பிரிவினைவாத செயல்களை ஆதரித்து வருகிறது.  இதனால், அந்த அமைப்பின் வளாகத்திலும் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுகின்றன.

டெல்லியில் இருந்து மூத்த டி.ஐ.ஜி. தலைமையிலான குழுவினர் ஸ்ரீநகர், புத்காம், கந்தர்பால், பாராமுல்லா, குப்வாரா, பந்திப்பூர், அனந்த்நாக், சோபியான், புல்வாமா, குல்கம், ராம்பன், தோடா, கிஷ்த்வார் மற்றும் ரஜோரி ஆகிய பகுதிகளில் சந்தேகத்துக்குரிய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.  கந்தர்பாலில் உள்ள ஜமாத்தின் மாவட்ட தலைவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story