கேரளாவில் சுற்றுலாதலங்களுக்கு இன்று முதல் அனுமதி


கேரளாவில் சுற்றுலாதலங்களுக்கு இன்று முதல் அனுமதி
x
தினத்தந்தி 8 Aug 2021 10:27 PM GMT (Updated: 8 Aug 2021 10:27 PM GMT)

தொற்று அதிகரிக்கும் நிலையில் கேரளாவில் சுற்றுலாதலங்களுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

தொற்று அதிகரிக்கும் நிலையில் கேரளாவில் சுற்றுலாதலங்களுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகைக்கு வணிக வளாகங்களும் திறக்கப்படுகிறது.

கேரளாவில் தினமும் 20 ஆயிரத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. எனினும் மாநில அரசு, தளர்வுகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று புதிய தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கேரள சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி வணிக வளாகங்களை 11-ந் தேதி (புதன் கிழமை) முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். கடைகளுக்கு அளிக்கப்பட்ட அதே கட்டுப்பாடுகள் மால்களுக்கும் பொருந்தும். ஏ.சி. இல்லாத ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.

மாநிலத்தில் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் உள்ள முழு ஊரடங்குக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு செல்ல இன்று (திங்கட்கிழமை) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கடற்கரைகளுக்கு செல்ல தடையில்லை. ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் சுற்றுலா மையங்களில் உள்ள ஓட்டல் அறைகளில் தங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

கொரோனா காரணமாக சுற்றுலா துறையில் மட்டும் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு மந்திரி முகமது ரியாஸ் கூறினார்.

கேரளாவில் தொற்று அதிகரிக்கும் நிலையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story