ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி
x
தினத்தந்தி 10 Aug 2021 6:28 AM IST (Updated: 10 Aug 2021 6:28 AM IST)
t-max-icont-min-icon

இந்திய பிரதமர்களில் முதல் முறையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு பிரதமர் மோடி நேற்று தலைமை தாங்கினார்.

புதுடெல்லி, 

இந்திய பிரதமர்களில் முதல் முறையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி, கடல்சார் பாதுகாப்புக்கு 5 கொள்கைகளை பரிந்துரைத்தார்.

ஐ.நா.வின் அதிகாரம் மிக்க பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினர் பதவியை இந்தியா பெற்றிருக்கிறது. இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் இந்த பதவியில் இருக்கும் இந்தியா, இந்த காலத்தில் சுழற்சி முறையில் தலைவர் பதவியையும் அலங்கரிக்கும் வாய்ப்பு உண்டு.

அந்தவகையில் பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்த மாத தலைவர் பதவி இந்தியாவுக்கு கிடைத்து உள்ளது. இந்த சூழலில் கடல்சார் பாதுகாப்பு குறித்த திறந்தநிலை விவாதம் ஒன்று பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நடந்தது.

இதில் கவுன்சிலின் தலைவர் என்ற முறையில், இந்தியாவின் பிரதமர் மோடி நேற்றைய விவாதத்துக்கு தலைமை தாங்கினார். அந்தவகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதத்துக்கு தலைமை தாங்கிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை, இதன் மூலம் பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது.

இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு மெய்நிகர் முறையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

‘கடல்சார் பாதுகாப்பு மேம்படுத்துதல்; சர்வதேச ஒத்துழைப்புக்கான விவகாரம்’ என்ற தலைப்பில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் கடல்சார் பாதுகாப்புக்காக 5 கொள்கைகளை மோடி கோடிட்டுக்காட்டினார்.

மேலும் பகிரப்பட்ட கடல் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-

பெருங்கடல்கள், நமது பகிரப்பட்ட மற்றும் உலக அளவில் பொதுவானவை ஆகும். அவை சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாகும். எல்லாவற்றிற்கும் மேலாக அவை நமது கிரகத்தின் எதிர்காலத்திற்கும் முக்கியம்.

ஆனாலும் இந்த பொதுவான கடல் பாரம்பரியமானது கொள்ளை, பயங்கரவாதம் மற்றும் நாடுகளுக்கு இடையேயான சர்ச்சைகள் என பல்வேறு வகையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது.

இந்த சூழலில் கடல்சார் பாதுகாப்புக்கு 5 அடிப்படை கொள்கைகள் முக்கியமானது. இதில் முதலாவதாக, முறையான கடல் வர்த்தகத்துக்கான தடைகளை நீக்க வேண்டும். அடுத்ததாக இயற்கை பேரழிவுகள் மற்றும் அரசு சாரா கடல் அச்சுறுத்தல்களை கூட்டாக எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

இதைப்போல கடல்சார் சூழல் மற்றும் பெருங்கடல்களைப் பாதுகாக்க வேண்டும். மேலும், கடல் வணிகத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இறுதியாக, நாடுகளுக்கு இடையேயான கடல்சார் சர்ச்சைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும். இது நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மிகவும் முக்கியம்.

இந்த புரிதல் மற்றும் முதிர்ச்சியின் மூலம்தான், வங்கதேசத்துடனான கடல்சார் சர்ச்சையை இந்தியா தீர்த்துக்கொண்டது. கடல் பாதுகாப்பு குறித்த கூட்டு கொள்கையை உருவாக்குவதற்கு தேவையான வழிமுறைகளை மேம்பட்ட விவாதங்கள் வழங்கும் என்று நம்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

Next Story