ஆவணி மாத பூஜை; சபரிமலை கோவில் நடை 15-ந் தேதி திறப்பு


ஆவணி மாத பூஜை; சபரிமலை கோவில் நடை 15-ந் தேதி திறப்பு
x
தினத்தந்தி 10 Aug 2021 3:59 AM GMT (Updated: 2021-08-10T09:29:56+05:30)

ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 15-ந் தேதி திறக்கப்படுகிறது.

திருவனந்தபுரம், 

இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார். தொடர்ந்து தீபாராதனை காட்டப்படும். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மறுநாள் 16-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் நடைபெறும்.

அன்றைய தினம் சிறப்பு பூஜையாக நிறை புத்தரிசி பூஜை நடக்கிறது. அப்போது பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் நெற்கதிர்களை பிரசாதமாக வழங்குவார்கள். இவ்வாறு வழங்கப்படும் நெற்கதிர்களை வீட்டில் வைத்து பாதுகாத்து தினசரி பூஜை செய்து வந்தால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

21-ந் தேதி ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதைதொடர்ந்து 23-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்தநாட்களில் வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலச பூஜை, நெய்யபிஷேகம், களபாபிஷேகம், படி பூஜை ஆகியவை நடைபெறும்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். சான்றிதழ் இல்லாதவர்கள் முன்பதிவு செய்து இருந்தாலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story