பஞ்சாப்பில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


பஞ்சாப்பில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 11 Aug 2021 7:12 AM GMT (Updated: 11 Aug 2021 7:12 AM GMT)

பஞ்சாப்பில் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ்,

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவலை முன்னிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலானது.  இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.  பல மாநிலங்களில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு, பின் ரத்து செய்யப்பட்டன.

இதையடுத்து கொரோனா 2வது அலையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா பரவல் குறித்து சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பஞ்சாப்பில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளிகள் கடந்த 2-ந் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன.  பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு ஆர்வமுடன் வருகை புரிந்தனர்.

இந்நிலையில், பஞ்சாப்பில் பள்ளிகள் திறக்கப்பட்ட இரண்டாவது வாரத்தில், லுதியானாவில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்ட அந்த 2 பள்ளிகள் 14 நாள்களுக்கு (ஆகஸ்ட் 24) மூடப்பட்டுள்ளன. மற்ற பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுகின்றன. 

தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் அவரவர் வீடுகளில் தடுமைப்படுத்தப்பட்டு அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாணவர்களிடையே தொற்று பரவுவதை கண்காணிப்பதற்காக மாநில சுகாதாரத்துறை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து தினமும் பத்தாயிரம் பரிசோதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

Next Story