பெங்களூருவில் வருகிற டிசம்பர் மாதம் முதல் 90 மின்சார பஸ்கள் இயக்கம் - பி.எம்.டி.சி. அதிகாரி தகவல்


பெங்களூருவில் வருகிற டிசம்பர் மாதம் முதல் 90 மின்சார பஸ்கள் இயக்கம் - பி.எம்.டி.சி. அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 11 Aug 2021 7:01 PM GMT (Updated: 11 Aug 2021 7:01 PM GMT)

பெங்களூருவில் வருகிற டிசம்பர் மாதம் முதல் 90 மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக பி.எம்.டி.சி. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

டீசல் செலவை குறைக்கும் வகையில் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம்(பி.எம்.டி.சி) மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்து உள்ளது. அதன்படி 90 மின்சார பஸ்களை அரியானா மாநிலம் குருகிராமில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது. இந்த பஸ்கள் வருகிற டிசம்பர் மாதம் முதல் இயங்க உள்ளது. இதுகுறித்து பி.எம்.டி.சி. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

“பெங்களூருவில் 31 பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்களை தயாரிக்க பல்வேறு அனுமதிகளை பெற வேண்டும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்த பஸ்கள் இயங்கும் விதம் பற்றி அறிந்து கொள்ள சமீபத்தில் பி.எம்.டி.சி. அதிகாரிகள் குருகிராமில் உள்ள நிறுவனத்திற்கு சென்று இருந்தனர். செப்டம்பர் முதல் வாரத்தில் பஸ்களை ஒப்படைப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் பின்னர், மூன்று மாதங்களுக்குள் அனைத்து பஸ்களும் தயாரிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும்.

நவம்பர் மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்படும். ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த பஸ்கள் 25 கிலோ மீட்டர் வேகத்தில் 180 கிலோ மீட்டர் தூரம் ஓடும் திறன் கொண்டது.

ஒரு பஸ் தினமும் 200 கிலோ மீட்டர் தூரம் இயக்கப்படும். இந்த பஸ்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.50 கோடி செலவாகிறது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை பொறுத்து பி.எம்.டி.சி-க்கு இந்த திட்டம் லாபகரமாக அமையும்.”

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Next Story