ராகுல் காந்திக்கு எதிரான பொதுநல மனு மீது செப்டம்பர் 27-ந் தேதி விசாரணை: டெல்லி ஐகோர்ட்டு அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Aug 2021 8:53 PM GMT (Updated: 2021-08-12T02:23:41+05:30)

ராகுல் காந்திக்கு எதிரான பொதுநல மனு மீது செப்டம்பர் 27-ந் தேதி விசாரணை நடைபெறும் என்று டெல்லி ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

புதுடெல்லி, 

டெல்லியில் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டார். 

இதன்மூலம், பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தி சட்டத்தை ராகுல் காந்தி மீறிவிட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என மகராந்த் சுரேஷ் மதேல்கர் என்ற சமூக ஆர்வலர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஜோதிசிங் ஆகியோர் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது டுவிட்டர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சஜன் பூவய்யா, சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.

மதலேகரின் வக்கீல் கவுதம் ஜா, இதுதொடர்பாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரினார். ராகுல் காந்தி சார்பில் மூத்த வக்கீல் ஆர்.எஸ்.சீமா ஆஜராகி வாதிட்டார். பின்னர் இந்த வழக்கில் நோட்டீஸ் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை வருகிற செப்டம்பர் மாதம் 27-ந் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

Next Story