ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்ற இசை நிகழ்ச்சியில் கொரோனா நிதியாக ரூ.37 கோடி திரண்டது


ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்ற இசை நிகழ்ச்சியில் கொரோனா நிதியாக ரூ.37 கோடி திரண்டது
x
தினத்தந்தி 12 Aug 2021 5:19 AM GMT (Updated: 12 Aug 2021 5:19 AM GMT)

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவுவதற்காக ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட காணொலி காட்சி இசை நிகழ்ச்சி மூலம் ரூ.37 கோடி திரண்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக இணையவழியில் நிதி திரட்டுகிற வேக்ஸ் இந்தியா அமைப்பினர் ஒரு காணொலி காட்சி இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பிரபல நகைச்சுவை நடிகர் ஹசன் மின்ஹாஜ் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், லியாம் நீசன், ஆனி லெனாக்ஸ், பியா டோஸ்கானோ, ஜூபின் மேத்தா, குளோரியா எஸ்டெபான், ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் உள்ளிட்ட திரளான பன்னாட்டு கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 7-ந் தேதி நேரடியாக ஒளிபரப்பானது.

இந்த நிகழ்ச்சிக்கு தனது அனுராதா பலகுர்தி அறக்கட்டளை மூலம் இந்திய அமெரிக்க பாடகி அனுராதா ஜூகு பாலகுர்தி உதவிக்கரம் நீட்டினார்.

இந்த நிகழ்ச்சி வாயிலாக 5 மில்லியன் டாலருக்கு அதிகமான நிதி (சுமார் ரூ.37 கோடி) திரண்டது.

இதுகுறித்து அனுராதா ஜூகு பாலகுர்தி கூறுகையில், “கொரோனாவுக்கு எதிரான இந்த உயிர்காக்கும் இயக்கத்துக்கு ஆதரவு அளிப்பதற்காக உலகமெங்கும் உள்ள சிறிய மற்றும் பெரிய நன்கொடையாளர்கள் தாராளமாக உதவினர். அவர்களுக்கு நன்றி” என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும்போது, “கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில், அர்த்தம் உள்ள வளங்களை 160 பிரபலங்கள் குழு திரட்டியதில் பெருமை கொள்கிறது. தங்களது நேரத்தையும், திறமையையும் வழங்கியதற்கு அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்” என குறிப்பிட்டார்.

இப்போதும் அந்த இசை நிகழ்ச்சியை வேக்ஸ்இந்தியாநவ்.காமில் பார்க்க முடியும்.

இதுபற்றி அவர் கூறுகையில், “ இந்த இசை நிகழ்ச்சி இன்னும் வேக்ஸ்இந்தியாநவ்.காமில் திறந்தே உள்ளது. இன்றே (நிதி) கொடுங்கள். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு, உருமாறிய கொரோனா வைரஸ்களை தடுப்பதற்கு, கொரோனாவுக்கு முடிவு கட்டுவதற்கு நாம் அனைவரும் இதில் ஒன்றுபடுவோம் எனவும் குறிப்பிட்டார்,

Next Story