தடுப்பூசி போட மறுத்த விமானப்படை அதிகாரி நீக்கம்


தடுப்பூசி போட மறுத்த விமானப்படை அதிகாரி நீக்கம்
x
தினத்தந்தி 12 Aug 2021 7:18 PM GMT (Updated: 12 Aug 2021 7:18 PM GMT)

கொரோனாவுக்கு எதிராக இந்திய விமானப்படை அதிகாரிகள் 9 பேர் தடுப்பூசி போட மறுத்து விட்டனர். இவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க மறுத்த ஒரு அதிகாரி விமானப்படையில் இருந்து நீக்கப்பட்டார்.

விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கூறி யோகேந்திர குமார் என்ற அதிகாரி குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.ஜே.தேசாய், ஏ.பி.தாக்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோதுதான், தடுப்பூசி போட மறுத்தது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அளிக்க மறுத்த அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்ட தகவலை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தேவாங் வியாஸ் தெரிவித்தார். அதே நேரத்தில் அந்த அதிகாரியின் பெயர் உள்ளிட்ட விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இதுபற்றி கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தேவாங் வியாஸ் நீதிபதிகளிடம் கூறுகையில், “இந்தியா முழுவதும் விமானப்படையினர் 9 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துள்ளனர். அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒருவர் பதில் அளிக்கவில்லை. அந்த பொறுப்பற்ற தன்மையை கருத்தில் கொண்டு, அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.

இந்த நிலையில், யோகேந்திர குமார் வழக்கை பொறுத்தமட்டில், அவர் தடுப்பூசி போட விருப்பம் இல்லை என்று கூறுவதை பரிசீலிக்குமாறு விமானப்படைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story