சஸ்பெண்டு செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான கோர்ட்டு விசாரணையை நிறுத்திவைக்க வேண்டும்; தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்


சஸ்பெண்டு செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான கோர்ட்டு விசாரணையை நிறுத்திவைக்க வேண்டும்; தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 13 Aug 2021 7:39 PM GMT (Updated: 13 Aug 2021 7:39 PM GMT)

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்டு செய்யப்பட்ட தமிழக சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை தினந்தோறும் விசாரித்து டிசம்பர் 20-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராகவும், வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரியும் தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் யு.யு.லலித், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, பாலாஜி ஸ்ரீனிவாசன் ஆஜராகி, விழுப்புரம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்ற கேட்டனர். அதற்கு தமிழக அரசின் கூடுதல் தலைமை வக்கீல் வி.கிருஷ்ணமூர்த்தி, இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் இல்லை என்பதால், விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும். இதற்கிடையில் தமிழக அரசிடம் இந்த வழக்கு தொடர்பாக ஆலோசித்து பதில் அளிக்கிறேன் என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனுக்களை தமிழக அரசின் கூடுதல் தலைமை வக்கீல் கிருஷ்ணமூர்த்தியிடம் நாளைக்குள் மனுதாரர் வக்கீல் அளிக்க வேண்டும். மனுக்கள் மீதான வழக்கு விசாரணையை ஆகஸ்டு 18-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என உத்தரவிட்டனர். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும் வரையில், மனுதாரருக்கு எதிரான கோர்ட்டு விசாரணை நடவடிக்கைகளை நிறுத்திவைக்க அரசு வக்கீலுக்கு அறிவுறுத்துங்கள் என வாய்மொழியாக தெரிவித்தனர்.

Next Story