ஒரு வீடு வைத்திருப்பவர்கள் கூடுதல் கார்களை வைக்க அனுமதிக்க கூடாது: மும்பை ஐகோர்ட்டு


ஒரு வீடு வைத்திருப்பவர்கள் கூடுதல் கார்களை வைக்க அனுமதிக்க கூடாது: மும்பை ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 13 Aug 2021 9:11 PM GMT (Updated: 13 Aug 2021 9:11 PM GMT)

சாலைகளில் வாகனங்கள் பெருத்துவிட்டன. ஒரு வீடு வைத்திருப்பவர்கள் 4 அல்லது 5 கார்களை வைக்க அனுமதிக்க கூடாது என மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

பொதுநலன் மனு
நவிமும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் குடியிருப்பு கட்டிடங்களில் வாகன நிறுத்தப்பகுதியை குறைக்க கட்டுமான அதிபர்களுக்கு அனுமதி அளிக்கும் அரசின் சட்டத்திருத்தத்திற்கு எதிராக மும்பை ஐகோர்ட்டில் பொது நலன் மனுவை தாக்கல் செய்து உள்ளார். மேலும் அவர் மனுவில், கட்டுமான அதிபர்கள் வாகன நிறுத்தப்பகுதியை குறைத்தால், குடியிருப்புவாசிகள் வாகனங்களை சாலைகளில் நிறுத்த வேண்டிய நிலை வரும் எனவும் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி திபான்கர் தத்தா, நீதிபதி ஜி.எஸ். குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. இதில் மனுவை விசாரித்த நீதிபதிகள் வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லை என்றால், பொதுமக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சொந்த வாகனங்களை நிறுத்த அதிகாரிகள் அனுமதி வழங்க கூடாது என கூறினர்.

வாகன பெருக்கம்
மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "புதிய கார்களை வாங்குவதை குறைப்பது அவசியமாகி உள்ளது. வாங்க முடிகிறது என்பதால் ஒரு வீடு வைத்து உள்ள குடும்பத்தினர் 4 அல்லது 5 வாகனங்களை வைக்க நீங்கள் அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு வாகன நிறுத்த இடம் உள்ளதா என்பதையும் நீங்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும். எல்லா சாலைகள், இடங்களிலும் வாகனங்கள் பெருத்து காணப்படுகின்றன. 2 பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்தவே சாலையில் 30 சதவீத இடம் ஆக்கிரமிக்கப் படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க விதிகள் இயற்றப்பட வேண்டும்" என்றனர். மேலும் இந்த மனு குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.

Next Story