புதுவையில் பிரெஞ்சு காலத்தில் பயன்படுத்தப்பட்ட நீராவி எந்திரம், குடிநீர் குழாய்கள் பொதுமக்கள் பார்வைக்காக அர்ப்பணிப்பு


புதுவையில் பிரெஞ்சு காலத்தில் பயன்படுத்தப்பட்ட நீராவி எந்திரம், குடிநீர் குழாய்கள் பொதுமக்கள் பார்வைக்காக அர்ப்பணிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2021 9:58 PM GMT (Updated: 13 Aug 2021 9:58 PM GMT)

முத்திரையர்பாளையம் நீரேற்று நிலையத்தில் பிரெஞ்சு காலத்தில் பயன்படுத்தப்பட்ட நீராவி எந்திரம், குடிநீர் குழாய்கள் பொதுமக்கள் பார்வைக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

முத்திரையார்பாளையம்
புதுவை மாநிலமானது 1954-ம் ஆண்டு வரை பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. அப்போது நகரப்பகுதிக்கு முத்திரையர்பாளையம் பகுதியில் இருந்துதான் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. முத்திரையர்பாளையம் தண்ணீருக்கு தனியாக சுவையுண்டு.இதை உணர்ந்த பிரெஞ்சு அரசானது அங்கு ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து தண்ணீரை எடுத்து மக்களுக்கு வினியோகிக்க திட்டமிட்டது. இதற்காக கடல் மட்டத்திலிருந்து சுமார் 21 மீட்டர் உயரமான பகுதியான முத்திரையர்பாளையத்தில் 24 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தரைநிலை நீர்த்தேக்க தொட்டியை அமைத்தது.

நீராவி எந்திரம்
அதாவது 500 சதுரமீட்டர் பரப்பளவில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையை கொண்டு கட்டப்பட்டது. ஆழ்குழாய் கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரானது நீராவி எந்திரம் மூலம் குழாய்கள் வழியாக ஒயிட் டவுண் பகுதிக்கு அனுப்பப்பட்டது. உயரமான பகுதியில் இருந்து தண்ணீர் வினியோகிக்கப்பட்டதால் போதிய அழுத்தத்துடன் மக்களுக்கு தண்ணீர் கிடைத்தது.1954-க்கு பிறகு புதுவை விடுதலை பெற்றவுடன் குடிநீர் வினியோக திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டது. பின்னர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது முத்திரையார்பாளையம் தலைமை நீரேறற்று நிலையத்தில் 16 ஆழ்குழாய் கிணறு மூலம் நாள்தோறும் 2 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

பொதுமக்கள் பார்வைக்காக...
இந்தநிலையில் பிரெஞ்சு காலத்தில் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய பயன்படுத்தப்பட்ட நீராவி எந்திரம், குழாய்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட கைவண்டி, குடிநீர் வினியோகித்த குழாய்கள் போன்றவை முத்திரையர்பாளையம் நீரேற்று நிலையத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயலாளர் விக்ராந்த் ராஜா, தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story