தலைநகர் காபூலை நெருங்கும் தலீபான்கள்; தூதரக ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை


தலைநகர் காபூலை நெருங்கும் தலீபான்கள்; தூதரக ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை
x
தினத்தந்தி 15 Aug 2021 5:55 AM GMT (Updated: 15 Aug 2021 5:55 AM GMT)

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை தலீபான் பயங்கரவாதிகள் வேகமாக நெருங்கி வரும் நிலையில் தூதராக ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானில், அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுவந்த அமெரிக்க ராணுவம் அங்கிருந்து சமீபத்தில் வெளியேறிவருகிறது. 

வரும்  30-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து நிலைமை அங்கு மிக மோசமாக மாறிவருகிறது. கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். இதனால், பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜலலாபாத் நகரத்தையும் இன்று காலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் தலைநகர் காபூலை தவிர ஏனைய பெரும்பாலான நகரங்கள் தலிபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை தலீபான் பயங்கரவாதிகள் வேகமாக நெருங்கி வரும் நிலையில் அங்குள்ள நமது நாட்டின் தூதராக ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் மாறிவரும் நிலைமையை இந்தியா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் பாதுகாப்பு நலன் கருதி ‌காபூலில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவது தொடர்பான திட்டங்கள் குறித்து பொதுவெளியில் விவாதிக்க அதிகாரிகள் தயாராக இல்லை என தெரிவிக்க ப்பட்டுள்ளது.

Next Story