காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் கைது - சுதந்திர தினத்தையொட்டி குண்டுவெடிப்பு சதி முறியடிப்பு


காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் கைது - சுதந்திர தினத்தையொட்டி குண்டுவெடிப்பு சதி முறியடிப்பு
x
தினத்தந்தி 15 Aug 2021 5:56 AM GMT (Updated: 15 Aug 2021 5:56 AM GMT)

காஷ்மீரில் சுதந்திர தினத்தையொட்டி நடத்தவிருந்த குண்டுவெடிப்பு சதி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

ஜம்மு, 

இந்தியாவுக்குள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அரங்கேற்றுவது, பாகிஸ்தானுக்கு கைவந்த கலையாகி இருக்கிறது.

நாடு இன்று தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிற தருணத்தில்கூட, காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பை நடத்த செய்த சதி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த சதியின் பின்னணியில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 4 பேர் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர், ஜம்மு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள், டிரோன்கள் (சிறிய ரக ஆளில்லா விமானம்) மூலம் போடப்படுகிற ஆயுதங்களை சேகரிக்கவும், அவற்றை காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பயங்கரவாதிகளுக்கு வினியோகிக்கவும், சுதந்திர தினத்துக்கு முன்பாக வாகனங்களில் பொருத்தக்கூடிய சக்தி வாய்ந்த நவீன ரக வெடிகுண்டை (ஐஇடி) வெடிக்கச்செய்யவும், நாட்டின் பிற பகுதிகளில் முக்கிய இலக்குகளை உளவு பார்க்கவும் சதி செய்துள்ளனர்.

இந்த சதித்திட்டத்தில், பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் முண்டாசிர் மன்சூர் என்ற சைபுல்லா தான் முதலில் கைது செய்யப்பட்டார்.

இவர் பிரிகூ புல்வாமாவை சேர்ந்தவர். இவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, தோட்டாக்களை போட்டு வைக்கிற உறை, 8 தோட்டாக்கள், 2 சீன கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

காஷ்மீருக்கு ஆயுதங்களை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட இவரது லாரியும் கைப்பற்றப்பட்டு விட்டது.

இதைத் தொடர்ந்து, ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த மேலும் 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்படடனர். இவர்களில் உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தின் கண்டலா பகுதியை சேர்ந்த இஜகார் கான் என்ற சோனுகான் ஒருவர்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தளபதி முனாசிர் என்ற சாகித்தான், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் டிரோன் போடுகிற ஆயுதங்களை சேகரிக்க கட்டளை பிறப்பித்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் அரியானா மாநிலம், பானிப்பட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை உளவு பார்க்கும்படியும் இவருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையும் இவர் செய்து, இது தொடர்பான வீடியோக்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி உள்ளார்.

அதைத் தொடர்ந்து அயோத்தியில் ராமஜென்ம பூமியை உளவு பார்க்கும்படி உத்தரவிட்ட நிலையில், அதைச் செய்வதற்கு முன்னால் இவர் கைது செய்யப்பட்டு விட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள எஞ்சிய 2 பயங்கரவாதிகள் காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தின் ஜெப் பகுதியில் உள்ள தவுசீப் அகமது ஷா என்ற சவுக்கத் மற்றும் ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதியான அப்ரார் ஆவார்கள்.

இவர்களில் தவுசீப் அகமது ஷா என்ற சவுக்கத்துக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தளபதி முனாசிர் என்ற சாகித் கட்டளைகள் பிறப்பித்து வந்துள்ளார்.

ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதியான அப்ராரை ஜம்முவில் பதுங்கி இருக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். அவரும் அவ்வாறே அங்கு பதுங்கி உள்ளார்.

அதன்பின்னர் ஜம்முவில் சக்தி வாய்ந்த நவீன ரக வெடிகுண்டை (ஐஇடி) பொருத்தி, குண்டு வெடிப்பு நடத்துவதற்கு ஒரு பழைய மோட்டார் சைக்கிளை வாங்குமாறு தவுசீப் அகமது ஷா என்ற சவுக்கத் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு, டிரோன் மூலம் போடப்படும் என இவருக்கு கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பணி முடியும் முன்பாகவே கைது செய்யப்பட்டு விட்டார்.

மேலும், காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், பாண்ட்ஸூ பகுதியை சேர்ந்த பழ வியாபாரியான ஜகாங்கிர் அகமது பட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானில் முனாசிர் என்ற சாகித்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். அவருக்கு இஜாகர் கானை அறிமுகம் செய்தும் வைத்துள்ளார். அத்துடன் காஷ்மீரிலும், நாட்டின் எஞ்சிய பகுதிகளிலும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்துக்கு ஜகாங்கிர் அகமது பட் ஆள் எடுத்தும் வந்திருக்கிறார்.

இந்த பயங்கரவாத சதிகளின் பின்னணி குறித்து தொடர்ந்து போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்துகிறது.

சுதந்திர தினத்தையொட்டி ஜம்முவில் பயங்கரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பை நடத்தவிருந்தது, தக்க சமயத்தில் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story