காபூலில் இருந்து இந்தியர்களை அவசரமாக வெளியேற்ற திட்டம் தயார் - மத்திய அரசு தகவல்


காபூலில் இருந்து இந்தியர்களை அவசரமாக வெளியேற்ற திட்டம் தயார் - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 16 Aug 2021 2:52 AM GMT (Updated: 16 Aug 2021 2:52 AM GMT)

காபூலில் இருந்து இந்தியர்களை அவசரமாக வெளியேற்ற திட்டம் தயார்நிலையில் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி, 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியானதை தொடர்ந்து, தலீபான்கள் பெரும்பான்மையான மாகாணங்களை கைப்பற்றி விட்டனர். தலைநகர் காபூலும் அவர்களது முற்றுகையில் சிக்கி இருக்கிறது. ஆட்சி அதிகாரம் அவர்கள் வசம் செல்வதால் அங்குள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது. அவர்களிடையே பீதி நிலவுவதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதரக ஊழியர்களை வெளியேற்றும் பணி தொடங்கி விட்டது. இந்தநிலையில், இந்தியர்கள் எப்போது வெளியேற்றப்படுவார்கள் என்று கேட்டதற்கு மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தானில் வேகமாக மாறிவரும் சூழ்நிலையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. காபூலில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய தூதரக ஊழியர்களின் உயிரை எவ்வகையிலும் பணயம் வைக்க மாட்டோம். அவர்களை அவசரமாக வெளியேற்ற வேண்டி இருந்தால், அதை செயல்படுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளது. கள நிலவரத்தை பொறுத்து, அவர்களை வெளியேற்ற தொடங்குவோம்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காபூலில் இருந்து இந்தியர்களையும், இந்திய தூதரக ஊழியர்களையும் அவசரமாக அழைத்து வருவதற்காக இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் ராணுவ சரக்கு விமானம் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

Next Story