கர்நாடகத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம்


கர்நாடகத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம்
x
தினத்தந்தி 16 Aug 2021 6:13 PM GMT (Updated: 16 Aug 2021 6:13 PM GMT)

கொரோனா பரவலுக்கு மத்தியில் கர்நாடகத்தில் வருகிற 23-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டுதலை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வந்தால் மட்டுமே அனுமதிப்படுவார்கள்.

கொரோனா பரவல்
மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தற்போது கொரோனா 3-வது அலை மாநிலத்தில் உருவாகவில்லை என்றும், 2-வது அலை தான் இருப்பதாக அரசுக்கு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து கடந்த 14-ந்தேதி நிபுணர்களுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

23-ந்தேதி பள்ளிகள் திறப்பு
அப்போது மாநிலத்தில் 2 சதவீதத்திற்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு (பி.யூ.சி. 2-ம் ஆண்டு) வரை திறக்க அனுமதி அளிக்கலாம் என்று அரசுக்கு, நிபுணர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.இதையடுத்து, மாநிலத்தில் வருகிற 23-ந் தேதியில் இருந்து 2 சதவீதத்திற்கு குறைவாக கொரோனா பாதிப்பு இருக்கும் மாவட்டங்களில் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.

வழிகாட்டு நெறிமுறைகள்
அதாவது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வருகிற 23-ந் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பசவராஜ் பொம்மை உறுதி அளித்தார். இதையடுத்து, பள்ளிகளை திறக்கவும், அதற்காக தனியாக வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்யும் பணியிலும் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டார்கள். குறிப்பாக ஒரு வகுப்பில் எத்தனை மாணவர்கள் இருக்க வேண்டும், எத்தனை மணிநேரம் பள்ளிகளை திறந்து வைத்திருக்கலாம் என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.இந்த நிலையில், வருகிற 23-ந் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அனுமதி கடிதம் கட்டாயம்
மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் மாவட்டங்களில் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வருகிற 23-ந் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக பெற்றோரிடம் இருந்து அனுமதி கடிதத்தை வாங்கி வரவேண்டும். அந்த அனுமதி கடிதத்தில் மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்பதை குறிப்பிட்டு இருக்க வேண்டு்ம். பள்ளிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டிகள், கழிவறைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும். 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் வீட்டில் இருந்தே குடிநீர், உணவு பொருட்களை எடுத்து வர வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு சுத்தமான வெந்நீர் மட்டுமே கொடுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு கட்டாயம் இல்லை.

20 பேர் மட்டுமே...
பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். பள்ளிகளுக்கு வரமுடியாத மாணவ, மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு படிக்கலாம். பள்ளிகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிவரை நடைபெறும். சனிக்கிழமைகளில் மட்டும் 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.50 மணிவரை நடைபெறும். ஒரு வகுப்பில் 15 முதல் 20 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மாணவர்கள் 3 அடி முதல் 6 அடி இடைவெளியில் அமர வேண்டும்.மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயம். ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றொருவர் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. இருமல், காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருப்பவர்கள் பள்ளிக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. ஆசிரியர்கள் கண்டிப்பாக மாணவர்களின் உடல் நிலை குறித்து தினமும் அறிந்து கொள்ள வேண்டும். அதுபற்றி தனியாக அறிக்கை தயாரித்து கல்வித்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தைரியமாக அனுப்ப வேண்டும்

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்திருப்பதால் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படுகிறது. பெற்றோர் தங்களது பிள்ளைகளை தைரியத்துடன் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாணவர்களின் நலன் தான் அரசுக்கும் முக்கியமாகும். கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டாலும், அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்கும் முடிவை அரசு எடுத்திருக்கிறது. அனைத்து ஆசிரியர்களும், ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு தான் பணியில் இருப்பார்கள். எனவே பெற்றோர் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story