சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; மத்திய அரசுக்கு, சரத்பவார் வலியுறுத்தல்


சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; மத்திய அரசுக்கு, சரத்பவார் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Aug 2021 7:29 PM GMT (Updated: 16 Aug 2021 7:29 PM GMT)

சமூக நீதியை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இட ஒதுக்கீடு விஷயங்களில் மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை தயாரிக்கும் விஷயத்தில் மாநில உரிமையை மீட்டெடுப்பதற்காக 2 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் வெறும் கண்துடைப்பு.இதர பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான தரவுகளை மாநிலங்களுடன் மத்திய அரசு பகிர வேண்டும். மாநிலங்களுக்கு இந்த தரவுகள் கிடைக்காத வரையில், சிறிய சாதியினருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது தெரியாது.மேலும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். இதை செய்தால் தான் சமூக நீதியை உறுதி செய்ய முடியும்.

இடஒதுக்கீட்டில் தளர்வு
பல்வேறு மாநிலங்களில் இடஒதுக்கீடு 60 சதவீதத்துக்கு மேல் உள்ளது. ஆனால் 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு என்பது சுப்ரீம் கோர்ட்டால் வலியுறுத்தப்படுகிறது. இந்த உச்சவரம்பை மத்திய அரசு தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தளர்வு செய்யாத வரையில், மராத்தா இடஒதுக்கீ்ட்டை மீட்டெடுக்க முடியாது.மேற்கண்ட பிரச்சினைகளில் எங்களது கட்சி மத்திய அரசுக்கு எதிரான கருத்தை உருவாக்கும். மோடிக்கு எதிராக பேச யாராவது ஒருவர் தைரியம் காட்ட வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story