அரசியல் சாசனம் நசுக்கப்படும்போது மவுனமாக இருப்பது பாவம்: சோனியா காந்தி


அரசியல் சாசனம் நசுக்கப்படும்போது மவுனமாக இருப்பது பாவம்: சோனியா காந்தி
x
தினத்தந்தி 16 Aug 2021 8:03 PM GMT (Updated: 16 Aug 2021 8:03 PM GMT)

அடிப்படை உரிமைகளும், அரசியல் சாசனமும் நசுக்கப்படும்போது மவுனமாக இருப்பது பாவம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

சோனியாவின் கட்டுரை
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கட்டுரை எழுதியுள்ளார். அதில் இந்தியாவில் ஜனநாயக மரபுகள் அழிக்கப்படுவது குறித்து அவர் ஆழ்ந்த கவலை வெளியிட்டு உள்ளார்.சுதந்திரம் என்றால் என்ன? என்பது குறித்து சுய பரிசோதனை செய்து கொள்ளுமாறு மக்களை அறிவுறுத்தி உள்ள அவர், அரசியல் சாசனம் நசுக்கப்படும்போது மவுனமாக இருத்தல் ஆகாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது கட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது:-

சுய ஆய்வு தேவை

மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நிறுவன தந்தையர்களால் உறுதி செய்யப்பட்ட அரசியல்சாசனம் ஆகியவை நசுக்கப்படும்போது, கண்களை மூடிக்கொண்டு மவுனமாக இருப்பது பாவம்.நாடாளுமன்றத்தின் மீது அரசு தாக்குதல் தொடுக்கும்போது, அதன் மரபுகளை நசுக்கும்போது, ஜனநாயகத்தை அடிமைப்படுத்தும்போது, அரசியல் சாசனத்தை மீற முயற்சிக்கும்போது, தன்னாட்சி நிறுவனங்களை கட்டிப்போடும்போது தங்களுக்கான சுதந்திரம் என்ன? என்பதை மக்கள் சுய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

மாநிலங்களுக்கு சுதந்திரம் இல்லை
நாட்டில் தற்போது ஊடகத்தினருக்கு எழுத சுதந்திரம் இல்லை, உண்மையை ஒளிபரப்ப தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சுதந்திரம் இல்லை, எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்களை வெளிப்படுத்த சுதந்திரம் இல்லை. எம்.பி.க்கள் கூட தங்கள் கருத்துகளை தெரிவிக்க சுதந்திரம் இல்லை.ஆக்சிஜன் பற்றாக்குறை, ஜி.எஸ்.டி சுமை குறித்து மக்களுக்கு பேச சுதந்திரம் இல்லை, ஒரு கூட்டாட்சி நாட்டில் தங்களின் உரிமைகளை கோர மாநிலங்களுக்கு கூட சுதந்திரம் இல்லை.கடந்த சில பத்தாண்டுகளில் எட்டப்பட்ட வளர்ச்சி அனைத்தும் தற்போதைய அரசின்கீழ் தலைகீழாக மாற்றப்பட்டு இருக்கிறது. நிர்வாகம் என்ற பெயரில் வெற்று கோஷங்கள், நிகழ்ச்சி மேலாண்மை போன்றவற்றில்தான் இந்த அரசு ஈடுபட்டு உள்ளது.

அருங்காட்சியகமான நாடாளுமன்றம்
நாடாளுமன்றம் வெறும் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருப்பதே இன்றைய அடையாளமும், யதார்த்தமுமாக உள்ளது. தேசிய நலன்சார்ந்த பிரச்சினைகளை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளில், அவைகளில் விவாதமோ அல்லது தேர்வுக்குழுவின் பரிசீலனையோ இல்லாமல் நாடாளுமன்றம் ரப்பர் ஸ்டாம்பாக திறம்பட மாற்றப்பட்டு இருக்கிறது.ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் கவிழ்க்கப்பட்டும், மக்களின் தீர்ப்புகள் அவமதிக்கப்பட்டும் வருகிறது.இப்படிப்பட்ட சூழலில் இந்திய ஜனநாயகத்தை சரிசெய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அதில் ஏற்பட்டுள்ள பழுதை நாம் கட்டாயம் நீக்க வேண்டும்.

கோட்சேயின் பார்வை
இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டை நாம் தொடங்குகையில், நமது விடுதலை போராட்ட வீரர்களுக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம். நமது குடியரசுக்கு ஏற்பட்டிருக்கும் சேதாரத்தை அகற்றுவதே அந்த கடன் ஆகும்.நமது சுதந்திர போராட்டத்திற்கு எந்த பங்களிப்பும் செய்யாதவர்களால், நமது சின்னங்களைப் பொருத்துவதற்கான வெற்று முயற்சிகளில் நாம் மயங்கி விடக்கூடாது. அவர்கள் காந்தியடிகளின் கண்ணாடிகளை கடன் வாங்கலாம், ஆனால் நம் நாட்டிற்கான அவர்களின் பார்வை கோட்சேயின் பார்வை ஆகும். இந்த பிரித்தாளும் சித்தாந்தத்தை நமது தேச நிறுவனர்கள் 74 ஆண்டுகளுக்கு முன்பே நிராகரித்தனர். நாம் அதை மீண்டும் நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கட்டுரையில் சோனியா காந்தி குறிப்பிட்டு உள்ளார்.

இந்த கட்டுரையை காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் தளத்திலும் வெளியிட்டு உள்ளது.

Next Story