ஆப்கானிஸ்தானை நாம் கைவிடவில்லை - நாடு திரும்பிய இந்திய தூதர்


ஆப்கானிஸ்தானை நாம் கைவிடவில்லை - நாடு திரும்பிய இந்திய தூதர்
x
தினத்தந்தி 17 Aug 2021 9:54 AM GMT (Updated: 2021-08-17T15:24:07+05:30)

இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோருடன் புறப்பட்ட சி-17 ரக விமானம் குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு இன்று வந்து சேர்ந்தது.

ஜாம்நகர்

ஆப்கானிஸ்தானை நாம் கைவிடவில்லை என்று காபூலில் இருந்து திரும்பிய இந்திய தூதர் கூறி உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் போய்விட்டது' என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின. 

அந்த வகையில், இந்தியாவும் அங்குள்ள நமது நாட்டு மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இன்று அதிகாலை காபூல் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து, 120 இந்திய அதிகாரிகளுடன் காபூலில் இருந்து இந்தியாவுக்கு 2-வது  இந்திய விமானப்படை  விமானம் (சி 17 ) புறப்பட்டது. 

இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோருடன் புறப்பட்ட சி-17 ரக விமானம் குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 11.40 மணியளவில் வந்தது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் இரண்டாவது கட்டமாக இந்திய அதிகாரிகள் நாடு திரும்பியுள்ளனர்.

பலர் தங்கள் தாயகத்திற்கு திரும்பிய மகிழ்ச்சியை வெளிப்படுத்த "பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டனர்.

ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திர தாண்டன் கூறியதாவது:-

உங்கள் வரவேற்பு எங்கள் அனைவரின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பாக  எங்களை வெளியேற்றிய இந்திய விமானப்படைக்கு நன்றி.

நாம் ஆப்கானிஸ்தானின் மக்களைக் கைவிடமாட்டோம். அவர்களின் நலன் மற்றும் அவர்களுடனான நமது உறவு நம் மனதில் அதிகம் உள்ளது. நாங்கள் அவர்களுடனான தொடர்புகளைத் தொடர முயற்சிப்போம், ஆனால் எந்த வடிவத்தில் என என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை நிலைமை மாறி வருகிறது என கூறினார்.

Next Story