மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அவதூறு ஏற்படுத்த பெண் காவலர்களை பயன்படுத்தியது; மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு


மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அவதூறு ஏற்படுத்த பெண் காவலர்களை பயன்படுத்தியது; மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 Aug 2021 6:31 PM GMT (Updated: 2021-08-18T00:01:17+05:30)

எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அவதூறு ஏற்படுத்தத்தான் மாநிலங்களவையில் அரசு பெண் காவலர்களை பயன்படுத்தியது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார்.

மல்லிகார்ஜூன கார்கே பேட்டி

நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

ஆகஸ்டு 11-ந்தேதியன்று, ஓ.பி.சி. (இதர பிற்படுத்தப்பட்டோர்) மசோதாவை நிறைவேற்றிய பின்னர் மாநிலங்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. உடனே அரசு பெண் காவலர்கள் உள்பட 40, 50 காவலர்களை திரட்டி விட்டது.அவர்கள் சபைக்குள் ஒரு கோட்டையை உருவாக்கினார்கள். சபையில் இடையூறும், வன்முறையும் ஏற்படுகிறபோதுதான், சபைத்தலைவர் காவலர்களை அழைப்பது வழக்கம். ஆனால் அப்போது காப்பீடு மசோதாவை எடுத்துக்கொள்வதற்கு முன்பே, அறிமுகம் செய்வதற்கும், விவாதத்துக்கும், நிறைவேற்றுவதற்கும் அவர்களை கொண்டு வந்து விட்டார்கள்.

‘அரசு உடல் பலத்தை பயன்படுத்துகிறது’
சட்டபூர்வ அலுவலை செய்து முடிக்க (மசோதாவை நிறைவேற்ற) அரசு பலத்தை பயன்படுத்தியது.ஆண் காவலர்களை விட பெண்காவலர்களை அரசு பயன்படுத்தியது. இதனால் யாராவது தவறுதலாக பெண் காவலர்களைத் தொட்டு விட்டால்கூட அவர்கள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது குற்றம் சாட்டி விடலாம். அவதூறு ஏற்படுத்தி விடலாம்.சபையை ஜனநாயக ரீதியில் அரசு நடத்தவில்லை. அவர்கள் சர்வாதிகாரத்தை விரும்புகிறார்கள். தங்களது செயல் திட்டத்தை அச்சுறுத்தி நிறைவேற்ற நினைக்கிறார்கள். ஏனென்றால் இரு சபைகளிலும் அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருந்திருந்தால் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்கமாட்டார்கள். அரசு உடல் பலத்தை பயன்படுத்துகிறது.

தாரை வார்க்க...
நாடாளுமன்றத்தில் கூடுதலான எண்ணிக்கையில் உறுப்பினர்களைப் பெற்று விட்டு, அரசு தனது உண்மையான நிறத்தை காட்டுகிறது. எங்கள் மீது குற்றம் சாட்ட முயற்சிக்கிறது.அவர்களது (மத்திய அரசு) அணுகுமுறை, எதிர்க்கட்சியின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதுதான். அவர்களது நோக்கம், அரசு நடத்துகிற காப்பீட்டு நிறுவனங்களை தங்கள் வணிக நண்பர்களுக்கு தாரை வார்ப்பதுதான்.கட்டுக்கடங்காத எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது முன்மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள். நடவடிக்கை வரும்போது அதைப் பார்ப்போம். எங்கள் உறுப்பினர்களும் காயம் அடைந்தார்கள். சபைத்தலைவர் பாரபட்சமற்றவராக இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு
எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பால்தான் முந்தைய நாடாளுமன்ற அமர்வுகளில் சபைகள் ஒழுங்காக அலுவல்களை நிறைவேற்ற முடிந்தது.பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நாடாளுமன்றத்தின் செயல்பாடு குறைவாகவே இருந்தது.பா.ஜ.க. ஆட்சியில் நாடாளுமன்றத்தின் செயல்பாடு 90 சதவீதம் என்றால், பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாடாளுமன்ற செயல்பாடு 65 சதவீதம் மட்டுமே.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story