நீதிபதிகள் பாதுகாப்பு தொடர்பாக பதில் அளிக்காத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


நீதிபதிகள் பாதுகாப்பு தொடர்பாக பதில் அளிக்காத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Aug 2021 11:26 PM GMT (Updated: 2021-08-18T04:56:09+05:30)

ஜார்கண்ட் மாநில நீதிபதி ஆட்டோ ஏற்றி கொல்லப்பட்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மேலும் இதே விவகாரம் தொடர்புடைய கருணாகர் மல்லிக் மனுவுடன் இந்த வழக்கை இணைத்து விசாரித்தது.

கருணாகர் மல்லிக் தாக்கல் செய்த மனு தொடர்பாக கடந்த 2019, டிசம்பர் 12-ந்தேதி உத்தரவின்படி, பதில் அளிக்காத மாநிலங்கள் அடுத்த விசாரணைக்குள் பதில் அளிக்க வேண்டும் என கடந்த 6-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரள அரசு வக்கீல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். அதை ஏற்ற நீதிபதிகள், ரூ.1 லட்சம் அபராதத்துடன் பதில் மனுவை 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய அவகாசம் அளித்தனர். மேலும் பதில் மனு தாக்கல் செய்யாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ரூ.1 லட்சம் அபராதத்துடன் பதில் மனுவை 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய அவகாசம் அளித்தனர். அபராதத்தை செலுத்த தவறினால் மாநில தலைமைச் செயலாளரை ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தனர். பின்னர் வழக்கு விசாரணையை 10 நாட்களுக்குத் தள்ளிவைத்தனர்.

Next Story