மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரி சாந்தனு தாக்குர் கைது செய்யப்பட்டாரா?


மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரி சாந்தனு தாக்குர் கைது செய்யப்பட்டாரா?
x
தினத்தந்தி 18 Aug 2021 12:07 AM GMT (Updated: 18 Aug 2021 12:07 AM GMT)

தான் கைது செய்யப்பட்டதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். அதை போலீசார் மறுத்துள்ளனர்.

போலீஸ் வாகனத்தில் சென்றார்
மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து ராஜாங்க மந்திரி சாந்தனு தாக்குர். மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பொங்கான் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.அவர் நேற்று வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பிரட்டி என்ற இடத்தில் போலீசார் தன்னை கைது செய்ததாக தெரிவித்தார். அங்கு கட்சி யாத்திரை நிகழ்ச்சிக்காக கூடியதால் கைதான பா.ஜனதாவினருடன் சேர்ந்து அவரும் போலீஸ் வாகனத்தில் அமர்ந்திருந்தார்.அவர் உள்ளிட்ட அனைவரையும் விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

போலீஸ் மறுப்பு
இதுகுறித்து மத்திய மந்திரி சாந்தனு தாக்குர் கூறுகையில், கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற தன்னை போலீசார் கைது செய்து விட்டதாக குற்றம் சாட்டினார்.ஆனால், அதை போலீசார் மறுத்தனர். சட்டவிரோதமாக கூடியதற்காக பா.ஜனதாவினர் கைது செய்யப்பட்டபோது, சாந்தனு தாக்குர், தானாகவே போலீஸ் வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டதாக அவர்கள் கூறினர்.

போலீசாரின் கருத்து பற்றி கேட்டபோது, சாந்தனு தாக்குர் கூறியதாவது:-
நானாக கைதாகி இருந்தால், என்னுடன் எதற்காக இத்தனை பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்?. நான் சட்டவிரோத செயலில் ஈடுபடுவதாக சொல்லித்தான் போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்காளத்தில் ஜனநாயகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story