மும்பையில் திறக்கப்பட்ட 2 நாளில் வணிக வளாகங்கள் மூடப்பட்டன


மும்பையில்  திறக்கப்பட்ட 2 நாளில் வணிக வளாகங்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 18 Aug 2021 1:00 AM GMT (Updated: 2021-08-18T06:30:27+05:30)

மும்பையில் திறக்கப்பட்ட 2 நாளில் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.

2 நாளில் மூடப்பட்டன
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்தும், பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மும்பையில் வணிக வளாகங்கள் திறக்கப்பட்டன. எனினும் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே வணிக வளாகங்களுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் வணிக வளாகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்தநிலையில் திறக்கப்பட்ட 2 நாளில் மும்பையில் வணிக வளாகங்கள் மூடப்பட்டன.

காரணம் என்ன?
இதுகுறித்து மும்பையில் செயல்படும் வணிக வளாக பிரதிநிதி ஒருவர் கூறுகையில், "வணிக வளாகம் திறப்பது தொடர்பாக மும்பை மாநகராட்சி வெளியிட்டு இருந்த வழிகாட்டுதலில், முதல் டோஸ் தடுப்பூசி போட்டாலே ஊழியர்களை பணியில் அமர்த்தலாம் என கூறப்பட்டு இருந்தது. எனவே தான் வணிக வளாகங்களை திறந்தோம். ஆனால் 16-ந் தேதி (நேற்று முன்தினம்) வெளியான மாநில அரசின் உத்தரவில், மேலாளர் முதல் துப்புரவு பணியாளர் வரை அனைத்து ஊழியர்களும் 2 டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வணிக வளாக ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் முதல் டோஸ் தடுப்பூசி மட்டுமே போட்டு உள்ளனர். வெகு சிலர் தான் 2 டோஸ் போட்டு உள்ளனர். அவர்களை வைத்து வணிக வளாகங்களை திறக்க முடியாது. எனவே தான் மூடினோம். அரசு உத்தரவில் மாற்றங்களை செய்யும் என நம்புகிறோம்" என்றார்.

Next Story