ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதை இந்திய விடுதலை போராட்டத்துடன் ஒப்பிட்ட எம்.பி.


ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதை இந்திய விடுதலை போராட்டத்துடன் ஒப்பிட்ட எம்.பி.
x
தினத்தந்தி 18 Aug 2021 11:24 PM GMT (Updated: 18 Aug 2021 11:24 PM GMT)

தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதையும் இந்திய விடுதலை போராட்டத்தையும் ஒப்பிட்டு பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.பி. மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இதனால், அந்நாட்டில் மிகவும் குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியது குறித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்.பி. ஷபிதூர் ரஹ்மான் பஃர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக நேற்று அவர் கூறுகையில், பிரிட்டிஷாரின் ஆட்சியில் இந்தியா இருந்தபோது சுதந்திரம் பெற நமது நாடு போராடியது. தற்போது, தலீபான்கள் அவர்களது நாட்டை விடுதலை அடையச்செய்து அதை ஆட்சி செய்ய முடிவு செய்துள்ளனர். வலிமையான நாடுகளான ரஷியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்படுவதை தலீபான்கள் அனுமதிக்கவில்லை’ என்றார். 

தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதையும் இந்திய விடுதலை போராட்டத்தையும் ஒப்பிட்டு பேசிய எம்.பி. மீது பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. மேலும், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எம்.பி. மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஷபிதூர் ரஹ்மான் பஃர் எம்.பி. மீது தேசத்துரோக சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எம்.பி. ஷபிதூரை தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த தலைவர்களான முகமது முக்யூம் மற்றும் சௌதிரி ஃபைசன் ஆகியோர் தங்கள் சமூகவலைதள பக்கத்தில் தலீபான்களுக்கு ஆதரவான பதிவுகளை வெளியிட்டனர். இதனால், அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.   

Next Story