விரைவாக மீட்க நடவடிக்கை எடுங்கள்: காபூலில் தவிக்கும் இந்திய ஆசிரியர்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை


விரைவாக மீட்க நடவடிக்கை எடுங்கள்: காபூலில் தவிக்கும் இந்திய ஆசிரியர்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 19 Aug 2021 1:55 AM GMT (Updated: 19 Aug 2021 1:55 AM GMT)

தலீபான்களின் பிடியில் ஆப்கானிஸ்தான் சிக்கியுள்ளதால் தங்களை விரைவாக மீட்குமாறு காபூலில் பணியாற்றும் இந்திய ஆசிரியர்கள் சிலர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலீபான்கள் வசமானது
ஆப்கானிஸ்தானை சுமார் 20 ஆண்டுகளுக்குப்பிறகு தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு பெரும் குழப்பமும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.இதனால் அங்கு வாழும் வெளிநாட்டு குடிமக்களை அந்தந்த நாடுகள் விரைந்து மீட்டு வருகின்றன. இந்தியாவும் ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்த இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் குடிமக்களை வெளியேற்றி உள்ளது.இன்னும் இந்திய குடிமக்கள் பலர் ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ளனர். அவர்கள் தங்களை மீட்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

4 ஆசிரியர்கள்
அந்தவகையில் காபூலில் உள்ள பக்தர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இந்திய ஆசிரியர்கள் 4 பேர், பல்வேறு மன்றங்கள் வாயிலாக மத்திய அரசின் கதவுகளை தட்டி வருகின்றனர். அங்கு தற்போது நிலைமை சுமுகமாக இருந்தாலும், இந்த பதற்றமான சூழலில் காபூலில் பணியாற்ற விரும்பவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து முகமது ஆசிப் ஷா என்ற ஆசிரியர் கூறும்போது, காபூல் முழுவதும் பதற்றம் நீடித்து வருவதால் கடந்த 2 நாட்களாக பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியே வரவில்லை எனவும், தற்போதைய சூழல் தங்களுக்கு பெருத்த அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.காஷ்மீரை சேர்ந்த இவர், பொருளாதார பேராசிரியர் ஆவார். கடந்த 16-ந்தேதி இந்தியா திரும்ப திட்டமிட்டு டிக்கெட்டும் எடுத்து வைத்திருந்த நிலையில், நிலைமை மோசமானதால் நாடு திரும்ப முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.

நிச்சயமற்ற சூழல்
மற்றொரு ஆசிரியரும், பீகாரை சேர்ந்தவருமான சையத் அபித் உசேன் கூறுகையில், காபூலில் அனைவரும் பத்திரமாகவே இருப்பதாக கருதப்பட்டாலும் இந்த நிச்சயமற்ற சூழலில் அங்கு வசிப்பதை விரும்பவில்லை என தெரிவித்தார். இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறையை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருவதாக கூறிய அவர், எனினும் தங்களை மீட்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.அதேநேரம் தாங்கள் பத்திரமாக தாய்நாட்டுக்கு அழைத்துச்செல்லப்படுவோம் என நம்புவதாகவும் உசேன் கூறினார்.இவர்களை தவிர காஷ்மீரை சேர்ந்த அடில் ரசூல், ஜார்கண்டை சேர்ந்த அப்ரோஸ் ஆலம் ஆகியோரும் தாய்நாடு திரும்பும் கனவுடன் பக்தர் பல்கலைக்கழக வளாகத்திலேயே தங்கியுள்ளனர்.

Next Story