ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் ஏழைக்கும், பணக்காரருக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை: மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா


ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் ஏழைக்கும், பணக்காரருக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை: மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா
x
தினத்தந்தி 19 Aug 2021 2:18 AM GMT (Updated: 19 Aug 2021 2:18 AM GMT)

ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஏழைக்கும், பணக்காரருக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்கிறது என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பெருமிதத்துடன் கூறி உள்ளார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் 2 கோடி பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதைக்குறிக்கும் வகையில் டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு அதிகார் பத்ரா, அபிநந்தன் பத்ரா, ஆயுஷ்மான் மித்ரா போன்ற முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.குறிப்பாக ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஆரோக்கிய யோஜனா 2 கோடி பேரை சென்றடைந்திருப்பதை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஆரோக்கியதாரா 2.0 என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஒரே இடத்தில் சிகிச்சை

அப்போது மன்சுக் மாண்டவியா பேசுகையில் கூறியதாவது:-
ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஏழை மற்றும் பணக்கார மக்களுக்கு ஒரே இடத்தில் தரமான மற்றும் மலிவான கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் ஒரு லட்சியத்திட்டம் ஆகும். இந்த திட்டம், தகுதிவாய்ந்த பயனாளிகள் அனைவருக்கும் பணமின்றி சுகாதார சேவைகளை பல குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லடசம் வரை வழங்கி உள்ளது. இப்படி, பின்தங்கிய பிரிவினர், கடன்கொடுப்போரிடம் கடன்வாங்காமல் சிகிச்சை பெற முடியும்.

பிரதமரின் தாழ்வான பின்னணி
பிரதமரின் தாழ்மையான பின்னணியானது, ஏழைகள் மற்றும் உதவியற்றவர்களின் வலியை உணர அவருக்கு உதவுகிறது. இந்த திட்டம், ஏழை மக்களுக்கு பணக்காரர்களை போலவே ஒரே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற உதவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story