பாமாயில் இறக்குமதியை குறைக்க ரூ.11 ஆயிரம் கோடியில் திட்டம்; மத்திய மந்திரி சபை ஒப்புதல்


பாமாயில் இறக்குமதியை குறைக்க ரூ.11 ஆயிரம் கோடியில் திட்டம்; மத்திய மந்திரி சபை ஒப்புதல்
x
தினத்தந்தி 19 Aug 2021 3:42 AM GMT (Updated: 19 Aug 2021 3:42 AM GMT)

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.11,040 கோடியில் பாமாயில் இறக்குமதியை குறைக்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது.

மந்திரிசபை ஒப்புதல்
இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் 3-ல் 2 பங்கை இறக்குமதி மூலமே நிறைவேற்றுகிறது. இதில் பாமாயில் இறக்குமதி மட்டுமே 56 சதவீதம் ஆகும். எனவே பாமாயில் இறக்குமதியை படிப்படியாக குறைக்கவும், அதற்கு பதிலாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் உள்நாட்டில் எண்ணெய் பனை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.11,040 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.‘சமையல் எண்ணெய்க்கான தேசிய திட்டம் - எண்ணெய் பனை’ (என்.எம்.இ.ஓ - ஓ.பி.) எனப்படும் இந்த திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்து உள்ளது.

வடகிழக்கு பிராந்தியம்
இந்த தகவலை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியம் மற்றும் அந்தமான், நிகோபார் தீவுகளை முன்வைத்து, ரூ.11,040 கோடியில் சமையல் எண்ணெய்க்கான தேசிய திட்டம் - எண்ணெய் பனை திட்டத்தை நிறைவேற்ற மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்திருக்கிறது’ என்று தெரிவித்தார்.இதில் ரூ.8,844 கோடி மத்திய அரசின் பங்காகவும், ரூ.2,196 கோடி மாநில அரசுகளின் பங்காகவும் இருக்கும் என கூறிய அனுராக் தாகூர், இந்த புதிய திட்டம் தற்போதைய உணவு பாதுகாப்பு திட்டத்தையும் உள்ளடக்கும் எனவும் தெரிவித்தார்.

10 லட்சம் ஹெக்டேர்

இந்த திட்டம் குறித்து வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:-

சமையல் எண்ணெய்க்கான தேசிய திட்டம் - எண்ணெய் பனை எனப்படும் இந்த புதிய திட்டத்தின் மூலம் 2025-26-ம் ஆண்டுக்குள் கூடுதலாக 6.5 லட்சம் ஹெக்டேரில் எண்ணெய் பனை விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த சாகுபடி பரப்பு 10 லட்சம் ஹெக்டேராக உயரும்.இதன் மூலம் கச்சா பாமாயில் உற்பத்தி 2025-26-ம் ஆண்டுக்குள் 11.20 லட்சம் டன்னாகவும், 2029-30-க்குள் 28 லட்சம் டன்னாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் எண்ணெய் பனை சாகுபடியில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்த திட்டம் நிவர்த்தி செய்யும்.

விலை ஏற்ற இறக்கம்
எண்ணெய் பனை சாகுபடியில் பலனும், லாபமும் கிடைக்க 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகும். எனவே அவ்வளவு நாட்கள் காத்திருக்க சிறு விவசாயிகளால் முடியாது. வெற்றிகரமாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கூட, விலை ஏற்ற இறக்கம் காரணமாக தகுந்த பலன் கிடைக்குமா? என்பது தெரியவிலலை.எனவே இதை கருத்தில் கொண்டு, எண்ணெய் பனை சாகுபடியை மேலும் அதிகரிப்பதற்காக இந்த திட்டத்தின் கீழ் உதவி வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

ஒப்பந்தத்துக்கு ஒப்புதல்
இதைப்போல சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் கட்டமைப்பிற்குள் உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) மற்றும் சுவிட்சர்லாந்தின் ‘பைண்ட்’ ஆய்வகத்துக்கு இடையே போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இந்த ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் கையெழுத்தாகி இருந்தது.

Next Story