சோனியா நடத்தும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், மம்தா பங்கேற்கிறார்கள்: காங்கிரஸ்


சோனியா நடத்தும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், மம்தா பங்கேற்கிறார்கள்: காங்கிரஸ்
x
தினத்தந்தி 20 Aug 2021 1:52 AM GMT (Updated: 20 Aug 2021 1:52 AM GMT)

மத்திய அரசுக்கு எதிரான கொள்கையை வகுக்கும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் சரத்பவார் மற்றும் சில மாநிலங்களின் முதல்-மந்திரிகள் பங்கேற்பார்கள் என காங்கிரஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஓரணியில் எதிர்க்கட்சிகள்
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டிருந்தன. குறிப்பாக பெகாசஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளில் தங்கள் எதிர்ப்பை ஒருமித்த குரலில் வெளிப்படுத்தின.மத்திய அரசுக்கு எதிரான இந்த எதிர்ப்பையும், ஒன்றிணைப்பையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லவும், அரசுக்கு எதிரான பொது செயல் திட்டத்தை உருவாக்குவதற்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா திட்டமிட்டு வருகிறார்.

ஆலோசனை கூட்டம்
இதற்காக எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று (வெள்ளிக்கிழமை) அவர் ஆலோசனை நடத்துகிறார். மெய்நிகர் முறையில் நடைபெறும் இ்ந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், அடுத்து வரவிருக்கும் தேர்தல்களில் பா.ஜனதாவை தோற்கடிக்கவும் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் திட்டங்களில் ஒரு பகுதியாக இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி
இந்த கூட்டத்தில் பங்கேற்க பல தலைவர்களும் உறுதியளித்து உள்ளனர். குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட சில முதல்-மந்திரிகள் மற்றும் பலர் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. மழைக்கால கூட்டத்தொடரில் இன்சூரன்ஸ் திருத்த மசோதா விவாதத்தின்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்ட அமளி தொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசு பரிசீலித்து வரும் நிலையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதைப்போல எதிர்க்கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த கூட்டம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Next Story