உரிய காலகட்டத்திற்குள் 3.87 கோடி பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடவில்லை: மத்திய சுகாதார அமைச்சகம்


உரிய காலகட்டத்திற்குள் 3.87 கோடி பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடவில்லை: மத்திய சுகாதார அமைச்சகம்
x

உரிய கால கட்டத்திற்குள் 3.87 கோடி பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி பற்றி கேள்வி
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கை நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.மத்திய அரசின் கோவின் தளத்தின்படி, நேற்று மதிய நிலவரப்படி 44 கோடியே 22 லட்சத்து 85 ஆயிரத்து 854 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.12 கோடியே 59 லட்சத்து 7 ஆயிரத்து 443 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.இந்த நிலையில் ராமன் சர்மா என்ற சமூக ஆர்வலர், இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்களில், உரிய காலகட்டத்திற்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் எண்ணிக்கை என்ன என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.

பதில்

இந்த கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் கொரோனா தடுப்பூசி பிரிவு அளித்துள்ள பதில் வருமாறு:-

* இரண்டாவது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை 84 முதல் 112 நாட்களுக்குள் போட்டு விட வேண்டும். இரண்டாவது டோஸ் கோவேக்சின் தடுப்பூசியை 28 முதல் 42 நாட்களுக்குள் செலுத்தி விட வேண்டும்.

* கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்களில் உரிய காலகட்டத்திற்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போடாதவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 72 ஆயிரத்து 993 ஆகும்.

* கோவேக்சின் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்களில் உரிய கால கட்டத்திற்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்கள் எண்ணிக்கை 46 லட்சத்து 78 ஆயிரத்து 406 ஆகும். (இது கடந்த 17-ந்தேதி நிலவரம்)

* தடுப்பூசிகளை பொறுத்தமட்டில் முதல் டோஸ் எந்த தடுப்பூசியை போடுகிறோமோ, அதே தடுப்பூசியின் இரண்டாவது டோசைத்தான் செலுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story