அனில்தேஷ்முக் ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ.க்கு என்னென்ன ஆவணங்களை கொடுக்க முடியும்; மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி


அனில்தேஷ்முக் ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ.க்கு என்னென்ன ஆவணங்களை கொடுக்க முடியும்; மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 21 Aug 2021 3:14 AM GMT (Updated: 21 Aug 2021 3:14 AM GMT)

அனில்தேஷ்முக் ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ.க்கு என்னென்ன ஆவணங்களை கொடுக்க முடியும் என மாநில அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

அனில்தேஷ்முக் ஊழல்
மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், உள்துறை மந்திரியாக இருந்த அனில்தேஷ்முக் மீது ஊழல் புகாரை தெரிவித்தார். இந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.இதேபோல போலீஸ் அதிகாரிகள் நியமனம், பணியிடமாற்றங்களிலும் ஊழல் நடந்து இருப்பதாக வெடிகுண்டு கார் வழக்கில் கைதாகி உள்ள முன்னாள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசே வாக்குமூலம் அளித்து உள்ளார். இதுகுறித்தும் ஐகோர்ட்டு அனுமதியுடன் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

சி.பி.ஐ. மனு
இந்தநிலையில் அனில்தேஷ்முக் மீதான வழக்கு விசாரணைக்கு மாநில அரசு ஒத்துழைக்க மறுப்பதாக சி.பி.ஐ. ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.இதில் விசாரணையின் போது, சி.பி.ஐ. அனில்தேஷ்முக் வழக்கிற்கு தொடர்பில்லாத ஆவணங்களை கேட்பதாக மாநில அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்தநிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே, என்.ஜே. ஜமாதார் ஆகியோர் அடங்கியஅமர்வு முன் நேற்று நடந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில், மாநில அரசு கடந்த ஜூலை மாதம் ஐகோர்ட்டு உத்தரவை அவமதிக்கும் வகையில் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தரமறுப்பதாக கூறியது.இதையடுத்து நீதிபதி எஸ்.எஸ். ஷிண்டே, " இதற்கு முன் மாநில அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு எந்த தயக்கமும் இல்லை என கூறியிருந்தது. தற்போது மாநில அரசுக்கு தயக்கம் என்ன?. எங்களிடம் வார்த்தைகள் இல்லை. ஏன் மாநில அரசு இதை செய்யக்கூடாது? " என்றார்.

ஐகோர்ட்டு கேள்வி
இதற்கு மாநில அரசு தரப்பில், அனில் தேஷ்முக் மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்புடையதை மட்டும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டது. இதற்கு நீதிபதிகள், "சி.பி.ஐ. ஆவணங்களை பார்க்காமல் அது தொடர்புடையதா இல்லையா என்பதை எப்படி முடிவு செய்ய முடியும்?. போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் நடந்த ஊழல் குறித்து ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா சமர்பித்த அறிக்கையை தான் அவர்கள் கேட்கிறார்கள். இந்த ஆவணங்களுக்கு நீ்ங்கள் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டீர்கள் என நம்புகிறோம். அனில்தேஷ்முக் மந்திரியாக இருந்த போது உள்ள ஆவணங்கள் எல்லாம் தேவைப்படலாம். மாநில அரசு என்ன ஆவணங்களை எல்லாம் கொடுக்க தயாராக இருக்கிறது என்ற பட்டியலை கொடுங்கள். இதனால் இணக்கமான நிலை உருவாகலாம்" என்றார்.

பின்னர் கோர்ட்டு மனுமீதான விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story