குஜராத்தில் தாய், தங்கைக்கு மயக்கமருந்து செலுத்தி கொன்ற பெண் டாக்டர்


குஜராத்தில் தாய், தங்கைக்கு மயக்கமருந்து செலுத்தி கொன்ற பெண் டாக்டர்
x
தினத்தந்தி 23 Aug 2021 5:34 AM GMT (Updated: 23 Aug 2021 5:34 AM GMT)

குஜராத்தில் தாய், தங்கைக்கு மயக்கமருந்து செலுத்தி கொன்ற பெண் டாக்டர், தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.

பெண் டாக்டர்
குஜராத் மாநிலம் சூரத் நகரில் வசதியானவர்கள் வசிக்கும் புறநகர் பகுதியான கட்டர்காமை சேர்ந்தவர், தர்ஷனா (வயது 30). ஓமியோபதி டாக்டர்.இங்குள்ள ஒரு வீட்டில் தனது தாய், தங்கை, அண்ணன், அண்ணி ஆகியோருடன் தர்ஷனா வசித்து வந்தார்.இவர் நேற்று முன்தினம் இரவு தனது தாய் மஞ்சுளா பென் (59), சகோதரி பால்குனி (28) ஆகியோருக்கு ஊசி மூலம் மயக்கமருந்தை அதிகளவில் செலுத்தினார்.பின்னர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டார். இதில் தாயும், தங்கையும் நேற்று அதிகாலையில் உயிரிழந்தனர். தர்ஷனா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

அண்ணன் அதிர்ச்சி
மனைவியுடன் வெளியூர் சென்றிருந்த பெண் டாக்டரின் அண்ணன் கவுரவ், நேற்று காலை வீடு திரும்பினார். வீட்டில் தனது தாயும், தங்கையும் இறந்துகிடப்பதையும், மற்றொரு தங்கை உயிருக்கு போராடுவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக தங்கை தர்ஷனாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சரியான நேரத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் உயிர் பிழைத்துக்கொண்டார்.

வாழப்பிடிக்காமல்...
தர்ஷனா, வீட்டில் ஒரு தற்கொலை கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் தான் வாழப் பிடிக்காமல் உயிரை மாய்த்துக்கொள்வதாக எழுதியிருந்தார்.ஆஸ்பத்திரியில் அவர் போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில், கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி தான் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை முடிவு எடுத்ததாக கூறினார். மேலும், தாயும், தங்கையும் தனக்கு உணர்வுப்பூர்மாக நெருக்கமானவர்கள், எல்லாவற்றுக்கும் தன்னைச் சார்ந்து இருப்பவர்கள். எனவே தனது மரணத்துக்குப் பின் கஷ்டப்படுவார்கள் என்பதால் அவர்களையும் கொன்றுவிட முடிவெடுத்ததாக கூறினார். அவர்கள் இருவருக்கும், பொதுவாக நோயாளிகளுக்கு தலா 2 மி.லி. அளவு செலுத்தும் மயக்கமருந்தை 10 மி.லி. அளவுக்கு போட்டதாகவும், அவர்கள் இருவருக்கும் மூட்டு வலி பிரச்சினை இருந்ததால், அதை வலி நிவாரணி மருந்து என்று கூறி செலுத்தியதாகவும், பின்னர் மயக்கமருந்து தீர்ந்துவிட்டதால் தான் 26 தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.

கொலை வழக்கு பதிவு
இதுதொடர்பாக, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் பெண் டாக்டர் தர்ஷனா மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story