கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கொண்டாடப்படும் உறியடி திருவிழா நடத்த வேண்டாம்: உத்தவ் தாக்கரே


கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கொண்டாடப்படும் உறியடி திருவிழா நடத்த வேண்டாம்: உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 24 Aug 2021 2:18 AM GMT (Updated: 24 Aug 2021 2:35 AM GMT)

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோலாகலமாக நடைபெறும் உறியடி திரு விழாவை நடத்த வேண்டாம் என்று விழா ஏற்பாட்டாளர்களிடம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.

மராட்டியத்தில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆலோசனை
குறிப்பாக மும்பை, தானே, புனே மற்றும் கொங்கன் பகுதிகளில் இந்த கொண்டாட்டம் களை கட்டும். கிருஷ்ண ஜெயந்திக்கு நடைபெறும் தஹி ஹண்டி என்னும் உறியடி திருவிழாவில் கோவிந்தாக்கள் பனை உயரத்திற்கு பிரமிடு அமைத்து அந்தரத்தில் தொங்கும் தயிர் பானைகளை உடைத்து அசத்துவார்கள்.தயிர்பானைகளை உடைக்கும் கோவிந்தா குழுக்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பரிசுகளை அள்ளி கொடுப்பார்கள். குறிப்பாக அரசியல் கட்சிகள் சார்பில் பரிசு மழையுடன் இந்த விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டு தஹி ஹண்டி கொண்டாட்டத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தஹிகண்டி ஏற்பாட்டாளர்கள், கோவிந்தா குழுக்கள் பிரதிநிதிகளுடன் மெய்நிகர் முறையில் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

கொரோனாவை விரட்டுவோம்
கொரோனா தொற்று மக்களின் அன்றாட வாழ்வில் பல கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளி உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் பொதுமக்களின் நலனுக்காகவே விதிக்கப்பட்டுள்ளன. சிலர் மட்டுமே இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராடுவது குறித்து பேசுகின்றனர். அவர்கள் அரசுக்கு எதிராக இல்லாமல், கொரோனா வைரசுக்கு எதிராக போராட வேண்டும். தடுப்பூசி போட்ட நாடுகள் கூட 3-வது அலையை சந்தித்து உள்ளன. அங்கு ஊரடங்கு மீண்டும் போடப்பட்டுள்ளது.

எனவே கொண்டாட்டங்களை சில காலம் தள்ளிவைத்துவிட்டு, மக்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவோம். கொரோனாவில் இருந்து மக்களை காக்க வேண்டியது அவசியம். பண்டிகை கொண்டாட்டங்களை தள்ளி வைத்துவிட்டு கொரோனாவை முழுமையாக விரட்டி அடித்து மாநிலம் முன்உதாரணமாக இருக்க வேண்டும். எனவே தஹி ஹண்டி திருவிழாவை ஏற்பாட்டாளர்கள் நடத்த வேண்டாம்.மருத்துவ ஆக்சிஜனின் தேவை 750 மெட்ரிக் டன்னை தாண்டும் போது மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பணிக்குழு தலைவர் எச்சரிக்கை
ஆலோசனை கூட்டத்தின்போது மாநில மருத்துவ பணிக்குழு தலைவர் டாக்டர் சஞ்சய் ஓக் கூறுகையில், "தஹி ஹண்டியின் போது சமூக இடைவெளியை பின்பற்றுவது என்பது சாத்தியம் இல்லாதது. மனித பிரமிடு அமைக்கும் போது ஒருவருக்கொருவர் அதிக நெருக்கத்தை சந்திக்க வேண்டிய நிலைமை உள்ளது. தற்போது டெல்டா பிளஸ் வைரஸ் வேறு பரவி வருகிறது. ஒருவர் வைரசால் பாதிக்கப்பட்டால், குழுவில் உள்ள அனைவருக்கும் அது பரவி விடும் ஆபத்து உள்ளது" என்றார். இதையடுத்து முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், "தஹிகண்டி விழா ஏற்பாட்டாளர்கள் முதல்-மந்திரியின் கோரிக்கை மற்றும் சமூக, சுகாதார நலத்திட்டப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற கருத்துக்கு சாதகமான பதிலை அளித்து உள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.

பா.ஜனதா எதிர்ப்பு
இதற்கிடையே தஹிகண்டி விழாவுக்கு முற்றிலுமாக தடைவிதிக்க கூடாது என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்து அந்த கட்சியை சேர்ந்த ஆஷிஸ் செலார் எம்.எல்.ஏ. கூறுகையில், "2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் குறைந்த உயரம், கூட்டம் கூடாமல் தஹிகண்டியை கொண்டாட அனுமதிக்க வேண்டும். தஹிகண்டி கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்க கூடாது" என்றார்.

Next Story