உ.பி.: மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு


உ.பி.:  மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 24 Aug 2021 7:33 AM GMT (Updated: 24 Aug 2021 7:33 AM GMT)

கொரோனா 3வது அலை பற்றிய அச்சம் நிலவும் சூழலில் உத்தர பிரதேசத்தில் 5 குழந்தைகள் உட்பட 6 பேர் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.



மதுரா,

இந்தியாவில் கொரோனா 3வது அலை பற்றி ஆய்வு மேற்கொண்ட தேசிய பேரிடர் மேலாண் மையம் வரும் அக்டோபரில் உச்சம் தொடும் என தெரிவித்து உள்ளது.  கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்களால் கூறப்பட்டது.

எனினும், குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.  அதனால், குழந்தைகள் கொரோனா 3வது அலையில் அதிகம் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று மருத்துவர் திரேன் குப்தா கூறியுள்ளார்.

இந்த நிலையில், உத்தர பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தின் கோன் கிராமத்தில் அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளது அப்பகுதியில் பதற்றம் ஏற்படுத்தி உள்ளது.

இந்த மர்ம காய்ச்சலால் இதுவரை மதுரா, ஆக்ரா, மற்றும் ராஜஸ்தானின் பரத்பூர் ஆகிய பகுதிகளில் 80 பேர் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  அதிக வெப்பநிலை தவிர்த்து வேறு எந்த அறிகுறியும் தெரியவில்லை.

அதனால், இது என்ன வகை காய்ச்சல் என தெரியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர் என மாவட்ட மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி, பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு ஒரு குழு நேரடியாக சென்று மலேரியா, டெங்கு அல்லது கொரோனா பாதிப்புகளா? என கண்டறிய ரத்த பரிசோதனைகள் எடுத்துள்ளனர் என்று தலைமை மருத்துவ அதிகாரி ரச்னா குப்தா கூறியுள்ளார்.

எனினும், ரத்தத்தில் பிளேட்லெட்டுகள் குறைவாக காணப்படும் நிலையில், டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Next Story