“2022 இறுதிக்குள் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு” - விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன்


“2022 இறுதிக்குள் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு” - விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன்
x
தினத்தந்தி 24 Aug 2021 11:18 PM GMT (Updated: 24 Aug 2021 11:18 PM GMT)

அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகில் சுமாா் 70 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படலாம் என விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று 2-வது அலை பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து விரைவில் 3-வது அலை பரவ வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-

“இந்தியாவில் கடந்த சில மாதங்களில் காணப்பட்டதைப் போல தற்போது கொரோனா தொற்று பரவவில்லை. எனவே தற்போது கொரோனா தொற்று மெதுவாகப் பரவும் நிலையை நாடு அடைந்துள்ளதாகக் கருதலாம். தொற்று பரவலைத் தடுப்பது தொடா்பான விழிப்புணா்வுடன் மக்கள் வாழத் தொடங்கிவிட்டனா். 

எனினும், கொரோனா தொற்றின் முதல், 2-ஆவது அலைகளில் பாதிக்கப்படாதோா் அதிகமாக உள்ள பகுதிகள், குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோா் உள்ள பகுதிகள் ஆகியவற்றில் அடுத்த சில மாதங்களில் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகில் சுமாா் 70 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என நம்பலாம். அதையடுத்து நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. 3-ஆம் அலை பரவும்போது, சிறாா்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.

அதன் காரணமாக பெற்றோா் கவலைப்படத் தேவையில்லை. 18 வயதைக் கடந்தவா்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளும், சிறாா்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது குறைவாகவே உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுபவா்களிடமும் மிதமான பாதிப்புகளே காணப்படுகின்றன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சிறாா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அதே வேளையில், சிறாா்களிடையே தொற்று பரவமால் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொள்ளலாம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story