வேளாண் சட்டங்களுக்கு எதிராக அடுத்த மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் - விவசாய சங்கத்தினர் அழைப்பு


வேளாண் சட்டங்களுக்கு எதிராக அடுத்த மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் - விவசாய சங்கத்தினர் அழைப்பு
x
தினத்தந்தி 27 Aug 2021 11:02 PM GMT (Updated: 27 Aug 2021 11:02 PM GMT)

வேளாண் சட்டங்களுக்கு எதிராக அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளை விவசாயிகள் முற்றுகையிட்டு உள்ளனர். சம்யுக்த் கிசான் மோர்ச்சா எனப்படும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தி வரும் இந்த போராட்டம் 9 மாதங்களை கடந்து விட்டது.

இந்த சட்டங்களை திரும்பப்பெறுமாறு நீண்ட காலமாக மத்திய அரசை வலியுறுத்தியும், செவிசாய்க்காததால் தங்கள் போராட்டங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர். அந்தவகையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் (பாரத் பந்த்) ஈடுபட விவசாயிகள் அழைப்பு விடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பை சேர்ந்த ஆஷிஷ் மிட்டல் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

செப்டம்பர் 25-ந்தேதி பாரத் பந்த் நடத்த நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். கடந்த ஆண்டும் இதே நாளில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் நடத்தப்பட்ட அந்த வேலைநிறுத்தம் வெற்றி பெற்றது. அதைவிட பெருவெற்றியை அடுத்தமாதம் நடத்தும் வேலை நிறுத்தம் பெறும்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக டெல்லியில் விவசாயிகள் நடத்திய 2 நாள் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது. இதில் 22 மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர். 300 விவசாய அமைப்புகள் மட்டுமின்றி, பெண்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான இயக்கங்களின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த 2 நாள் கூட்டத்தில், டெல்லியில் கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அத்துடன் இந்த போராட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்றுவதிலும் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் இந்த அரசு எந்தவகையில் கார்பரேட் நலன் சார்ந்து இயங்குகிறது? என்பதையும், விவசாய சமூகத்தினரை எந்த அளவுக்கு தாக்குகிறது? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இவ்வாறு ஆஷிஷ் மிட்டல் கூறினார்.

Next Story