பள்ளிகள் திறப்பு; பெற்றோர்களுக்கு நிபுணர்கள் விடும் எச்சரிக்கை


பள்ளிகள் திறப்பு; பெற்றோர்களுக்கு நிபுணர்கள் விடும் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Aug 2021 6:32 AM GMT (Updated: 29 Aug 2021 6:32 AM GMT)

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழலில் பெற்றோர்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.


புதுடெல்லி,

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.  எனினும், கொரோனா 2வது அலையின் பாதிப்பு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் குறைந்து வருகிறது.  இதனையொட்டி அந்தந்த மாநில அரசுகள் பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஆந்திர பிரதேசத்தில், மூடப்படிருந்த பள்ளிகள் கொரோனா கட்டுப்பாட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ந்தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.  எனினும், ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.  இதுபற்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் நவீத் விக், பள்ளிகள் திறப்பு பற்றிய நன்மை, தீமைகளை அளவிட வேண்டியது அவசியம்.  குழந்தைகள் வீட்டிலேயே இருந்து சலிப்பு ஏற்பட்டு இருக்கும்.  எனினும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை பற்றியும் அறிவது முக்கியம் என கூறியுள்ளார்.

பள்ளி செல்லும் குழந்தைகள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை.  பள்ளிக்கு சென்றாலும், அவர்களை தடுப்பூசி போட்டு கொள்ளாத தனிநபர்களாகவே நடத்த வேண்டும்.  அவர்களது உடல் மற்றும் மனநலம் காக்கப்பட வேண்டும்.  தொற்று விகிதம் 0.5 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது என உறுதி செய்யப்பட வேண்டும்.

பள்ளிகளில் சுவாச சுகாதாரம், தூய்மை, முக கவசங்கள் ஆகியவை உள்ளன என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.  நம்முடைய குழந்தைகளை நாம்தான் காக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Next Story