அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமாயண மாநாட்டை தொடங்கி வைத்தார், ஜனாதிபதி


அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமாயண மாநாட்டை தொடங்கி வைத்தார், ஜனாதிபதி
x
தினத்தந்தி 29 Aug 2021 9:30 PM GMT (Updated: 29 Aug 2021 9:30 PM GMT)

அயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள தற்காலிக ராமர் கோவிலில் குடும்பத்தினருடன் ஜனாதிபதி சாமி கும்பிட்டார். ராமாயண மாநாட்டையும் அவர் தொடங்கி வைத்தார்.

அயோத்தி, 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக உத்தரபிரதேசத்துக்கு சென்றார். 4-வது நாளான நேற்று, அவர் அயோத்திக்கு பயணம் மேற்கொண்டார்.

இதற்காக தலைநகர் லக்னோவில் இருந்து ஜனாதிபதிக்கான சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார். அவருடன் அவருடைய மனைவி சவீதா கோவிந்த் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் சென்றனர். ரெயில்வே வாரிய தலைவர் சுனித் சர்மா மற்றும் உயர் அதிகாரிகளும் உடன் சென்றனர்.

காலை 9.40 மணிக்கு ரெயில் புறப்பட்டது. அயோத்திக்கு செல்லும் ரெயில் பாதையை ஒட்டிய சாலைகள் அனைத்தும் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தன. வழியில் உள்ள லெவல் கிராசிங்குகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு இருந்தன.

லக்னோவில் இருந்து 134 கி.மீ. தொலைவில் உள்ள அயோத்திக்கு காலை 11.25 மணிக்கு ரெயில் சென்றடைந்தது. ரெயில் நிலையத்தில் ஜனாதிபதியை கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அயோத்தி மேயர் மற்றும் பலர் வரவேற்றனர்.

வரவேற்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கார் மூலம் அயோத்திக்கு புறப்பட்டார். அயோத்திக்கு செல்லும் 3 கி.மீ. தூரம் முழுவதும் கலாசார துறை சார்பில் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆங்காங்கே மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அறிவிக்கப்படாத ஊரடங்கு போல் காணப்பட்டது.

ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி ஆன பிறகு அயோத்திக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும். அவரது கார் அணிவகுப்பு செல்லும் பாதையில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் புதிதாக மஞ்சள் பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்தது. அவர் அயோத்தியில் ராம்கதா பார்க் என்ற இடத்துக்கு போய் சேர்ந்தார்.

அங்கு 2 மாத காலத்துக்கு மேல் நடைபெற உள்ள ‘ஜன ஜன கே ராம்’ என்ற ராமாயண மாநாட்டை ஜனாதிபதி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாநாடு தொடர்பான அஞ்சல் உறையை வெளியிட்டார்.

மாநாட்டில், ஜனாதிபதி பேசியதாவது:-

ராமர் கோவில் கட்டுமான பணி நடக்கும் நகருக்கு வந்துள்ளேன். ராமர் இல்லாமல் அயோத்தியே இல்லை. ராமர் இருக்கும் இடத்தில்தான் அயோத்தி இருக்கும். இந்த நகரில் ராமர் நிரந்தரமாக வாழ்கிறார். அயோத்தி என்றால், யாரும் போர் தொடுக்க முடியாதது என்று பொருள்.

என் பெற்றோர் ராமர் மீது மரியாதை கொண்டவர்கள் போலிருக்கிறது. அதனால்தான் இப்பெயரை வைத்துள்ளனர். ராமர் வனவாசம் இருந்தபோது, போர் தொடுக்க அயோத்தியில் இருந்தோ, மிதிலையில் இருந்தோ படைகளை வரவழைக்கவில்லை. வானரங்களை வைத்து படை அமைத்தார். அந்த அளவுக்கு ஆதிவாசிகள் மீது ராமர் பாசம் கொண்டவர் என்று அவர் பேசினார்.

மாநாட்டில், கவர்னர், முதல்-மந்திரி, ரெயில்வே ராஜாங்க மந்திரி தர்ஷனா ஜர்தோஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மாநாடு குறித்த வீடியோ காட்சியும் திரையிடப்பட்டது.

ராமாயண மாநாட்டையொட்டி, 16 நகரங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ராமாயண நிகழ்வுகள் தொடர்பான நடனம், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

மாநாட்டை தொடர்ந்து, ஜனாதிபதி சரயு ஓட்டலுக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டார். சிறிது நேர ஓய்வுக்கு பிறகு, அனுமன்காரி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

அதையடுத்து, ராமர் பிறந்த இடமான ராமஜென்மபூமிக்கு சென்றார். அங்குள்ள தற்காலிக ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலையை குடும்பத்தினருடன் வழிபட்டார். மரக்கன்று நட்டு வைத்தார். கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ராமர் கோவிலின் மாதிரி வடிவம் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.

பிரமாண்ட ராமர் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். ராமஜென்மபூமியில் வழிபட்ட முதலாவது ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் ஆவார். அயோத்தி பயணத்தை முடித்துக்கொண்டு, பிற்பகல் 3.35 மணிக்கு சிறப்பு ரெயிலில் ஜனாதிபதி லக்னோவுக்கு புறப்பட்டார். லக்னோ சென்றடைந்த பிறகு, விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.


Next Story