கோடநாடு வழக்கு: போலீஸ் மேல்விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 Aug 2021 10:34 PM GMT (Updated: 29 Aug 2021 10:34 PM GMT)

கோடநாடு வழக்கில் போலீஸ் மேல்விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீசின் மேல்விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அனுபவ் ரவி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீஸ் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி என்ற அனுபவ் ரவி, போலீஸ் மேல்விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இந்த வழக்கில் மேல்விசாரணை நடத்த உள்ளதால், அவர்கள் விருப்பப்படி வாக்குமூலம் அளிக்குமாறு பல தரப்பில் இருந்தும் தனக்கு மிரட்டல்கள் வருவதாக தெரிவித்திருந்தார்.

அரசுத்தரப்பில் 41 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முடித்தநிலையில், கோர்ட்டு அனுமதியின்றி மேல்விசாரணை நடத்திவருவதாகவும், இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி விசாரணை கோர்ட்டுக்கு உத்தரவிடுவதுடன், மேல்விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீஸ் மேல்விசாரணை நடத்த அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்து, ரவியின் மனுவை தள்ளுபடி செய்து ஆகஸ்டு 27-ந் தேதி உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ரவியின் சார்பில் வக்கீல் என்.ஆனந்த் கண்ணன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தால் இந்த வழக்கை போலீஸ் மேல்விசாரணை செய்வது சட்டத்துக்கு புறம்பானது. இது, சுப்ரீம் கோர்ட்டு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்புக்கும் எதிரானது.

அதை கருத்தில்கொள்ளாமல் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. எனவே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை மேல்விசாரணை செய்வதற்கு போலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story