16 வயது சிறுவனுக்கு தடுப்பூசி போட்ட சுகாதார அதிகாரிகள்: உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 Aug 2021 11:05 PM GMT (Updated: 29 Aug 2021 11:05 PM GMT)

மத்திய பிரதேசத்தில் சுகாதார அதிகாரிகள் 16 வயது சிறுவனுக்கு செலுத்திய தடுப்பூசியால், அவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மொரேனா, 

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை.

ஆனால் மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்துக்கு உட்பட்ட பக் கா புரா பகுதியில் உள்ள தடுப்பூசி மையத்தில் பில்லு என்ற 16 வயது சிறுவனுக்கு நேற்று முன்தினம் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

தடுப்பூசி போட்டவுடன் சிறுவனுக்கு தலை சுற்றல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டதுடன், வாயில் இருந்து நுரையும் தள்ளியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் தடுப்பூசி மையத்தில் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.

சிறுவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்த சுகாதார அதிகாரிகள், உடனடியாக அவனை குவாலியரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் அவர்கள் வீட்டுக்கே சென்றுவிட்டனர்.

இதைத்தொடர்ந்து சிறுவனின் உடல்நிலை குறித்து அறிய நேற்று அவனது வீட்டுக்கு சுகாதார அதிகாரிகள் சென்றனர். இதற்கிடையே 18 வயது பூர்த்தியடையாத சிறுவனுக்கு எப்படி தடுப்பூசி போடப்பட்டது? என்பதை கண்டறிய மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story