கடின உழைப்பு, ஆர்வம் ஆகியவற்றால் வெற்றி சாத்தியப்பட்டு உள்ளது; லெகாராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


கடின உழைப்பு, ஆர்வம் ஆகியவற்றால் வெற்றி சாத்தியப்பட்டு உள்ளது; லெகாராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 30 Aug 2021 3:30 AM GMT (Updated: 30 Aug 2021 3:30 AM GMT)

டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை அவனி லெகாராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.


புதுடெல்லி,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா அதிரடியாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.  இதனால், அவர் இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு பதக்கம் பெற்று தருவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அதனை நிறைவேற்றும் வகையில், இந்திய வீராங்கனை அவனி லெகாரா, மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதி போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த அவர் போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்துள்ளார்.  இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் பெற்று தந்து அவனி லெகாரா வரலாறு படைத்து உள்ளார்.

அவருக்கு இந்திய பாராஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தீபா மாலிக் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.  இதேபோன்று பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில், சிறந்த முறையில் அவனி லெகாரா செயல்பட்டு உள்ளார்.

துப்பாக்கி சுடுதலில், இயற்கையிலேயே உங்களுக்கு அமைந்த கடின உழைப்பு மற்றும் ஆர்வம் ஆகியவற்றால் இந்த வெற்றி சாத்தியப்பட்டு உள்ளது.

தங்கம் வெல்ல தகுதி கொண்ட, கடின உழைப்பாளியான உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.  இந்திய விளையாட்டில் உண்மையில் இது ஒரு சிறப்பு தருணம்.  வருங்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள் என்று தெரிவித்து உள்ளார்.




Next Story