உத்தரகாண்டில் நிலச்சரிவு: 2 பேர் உயிரிழப்பு; 5 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்


உத்தரகாண்டில் நிலச்சரிவு:  2 பேர் உயிரிழப்பு; 5 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்
x

உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 5 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர்.


டேராடூன்,

உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதேபோன்று பல பகுதிகளில் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டு உள்ளன.

இதனால் வாகன போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.  நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.  உத்தரகாண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தமி, கார்வல் பிரிவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியே சென்று நேற்று பார்வையிட்டார்.

இந்த நிலையில், முதல் மந்திரி புஷ்கர் சிங் தமி இன்று வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், பித்தோரகார் மாவட்டத்தில் ஜும்மா கிராமம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.   5 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர்.  மாவட்ட மாஜிஸ்திரேட் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் சஷாஸ்திர சீம பால் படையினரும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு சென்றுள்ளனர்.  நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என்று மாவட்ட மாஜிஸ்திரேட் ஆஷிஷ் சவுகான் தெரிவித்து உள்ளார்.


Next Story