கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டிய பயணிகள் பட்டியலில் மேலும் 7 நாடுகள் சேர்ப்பு


கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டிய பயணிகள் பட்டியலில் மேலும் 7 நாடுகள் சேர்ப்பு
x
தினத்தந்தி 3 Sep 2021 12:12 AM GMT (Updated: 3 Sep 2021 12:12 AM GMT)

இந்தியாவுக்கு வரும்போது கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் மேலும் 7 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

கொலம்பியா நாட்டில் பி.1.621 என்ற புதிய உருமாறிய கொரோனா முதல்முதலில் கண்டறியப்பட்டது. அதற்கு உலக சுகாதார நிறுவனம் ‘மு’ என்று பெயர் சூட்டியுள்ளது. இது, தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாமல் எதிர்த்து செயல்படக்கூடியது என்றும் தெரிவித்துள்ளது. தென்அமெரிக்க நாடுகள், சீனா போன்ற நாடுகளிலும் இந்த புதிய கொரோனா பரவி விட்டது. 

இதையடுத்து, இந்தியாவில் ‘மு’ பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு, எந்தெந்த நாட்டினர் கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்கான பட்டியலை மத்திய அரசு ஏற்கனவே பராமரித்து வருகிறது. அதில், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், புதிய உருமாறிய கொரோனா ‘மு’ பரவாமல் தடுக்கும்வகையில், இந்த பட்டியலில் மேலும் 7 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. தென்ஆப்பிரிக்கா, சீனா, போட்ஸ்வானா, வங்காளதேசம், மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய 7 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த நாடுகளை சேர்ந்தவர்கள், இந்தியாவுக்கு வர விமானம் ஏறுவதற்கு முன்பு 72 மணி நேரத்துக்குள் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதில், ‘கொரோனா இல்லை’ என்று தெரிந்தால் மட்டுமே விமானம் ஏற அனுமதிக்கப்படுவார்கள். இந்தியா வந்து சேர்ந்தவுடன், மறுபடியும் அவர்களுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படும். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார். 

Next Story