மும்பையில் 3-வது அலை ஏற்படுமா? தடுப்பூசி போட மக்கள் குவிகிறார்கள்


மும்பையில் 3-வது அலை ஏற்படுமா? தடுப்பூசி போட மக்கள் குவிகிறார்கள்
x
தினத்தந்தி 3 Sep 2021 1:36 AM GMT (Updated: 3 Sep 2021 1:36 AM GMT)

மும்பையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் 3-வது அலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மக்கள் தடுப்பூசி போட குவிந்து வருகிறார்கள்.

மும்பையில் கொரோனா 2-வது அலை உச்சத்திற்கு சென்று பின்னர் படிப்படியாக குறைந்து வந்தது.

கொரோனா பாதிப்பு
தலைநகர் மும்பையில் கடந்த மாதம் 16-ந் தேதி 190 பேருக்கு மட்டும் கொரோனா கண்டறியப்பட்டது. இது 2020-ம் ஆண்டுக்கு பிறகு மிக குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பாகும்.அதேபோல கொரோனா இரட்டிப்பாகும் நாட்களும் 2 ஆயிரமாக உயர்ந்தது. மேலும் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 20 ஆக குறைந்தது.இதற்கிடையே மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்காக படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்தது. சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் குவிய தொடங்கி உள்ளனர்.ரெயிலில் தடுப்பூசி போட்டவர்கள் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைத்தனர்.

400-ஐ தாண்டியது
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு சமீப நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது.ஆனால் கடந்த சில நாட்களாக மக்கள் வெளியில் நடமாடுவதை பொறுக்காத கொரோனா வைரஸ் மீண்டும் தனது ஆட்டத்தை காட்ட தொடங்கி உள்ளது. அதாவது கடந்த 2 நாட்களாக 400-க்கு மேல் உயர்ந்திருக்கும் கொரோனா ஒருநாள் பாதிப்பு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.நேற்று முன்தினம் மும்பையில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.இந்தநிலையில் நேற்றும் 441 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம் தலைநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 45 ஆயிரத்து 12 ஆக அதிகரித்து.மேலும் 3 பேர் தொற்று நோயின் காரணமாக உயிரிழந்தனர். இதன்மூலம் தலைநகரில் கொரோனா இறப்பு 15 ஆயிரத்து 984 ஆக உயர்ந்தது.

இரட்டிப்பாகும் காலம்
மாநகராட்சி அதிகாரிகள் அளித்த தகவலின்படி தலைநகரில் ஒரு நாளில் மட்டும் 205 பேர் நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 23 ஆயிரத்து 155 ஆக உயர்ந்துள்ளது.தலைநகரில் தற்போது 3 ஆயிரத்து 418 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் நோய் இரட்டிப்பாகும் கால அளவு 1,479-ல் இருந்து 1446 நாட்களாக குறைந்துள்ளது.இது நோய் பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருவதன் அறிகுறியாகும்.

சீல் வைக்கப்பட்ட கட்டிடங்கள்
மும்பை மாநகராட்சி 5 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் அந்த கட்டிடங்களுக்கு சீல் வைப்பதுடன் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கிறது. அதன்படி மும்பையில் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 32-ல் இருந்து 47 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “மும்பையில் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் மக்கள் நெரிசல் உள்ள குடிசை மற்றும் சால்களில் கடந்த மாதம் இடைப்பட்ட நாட்களில் இருந்து புதிய கட்டுப்பாட்டு மண்டலங்கள் இல்லை” என்றார்.

தடுப்பூசி போட குவிகிறார்கள்
அதேநரேம் நோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. எனவே தடுப்பூசி மையங்களில் மக்கள் குவிய தொடங்கி உள்ளனர்.முண்டியடித்துக்கொண்டு எப்படியும் தடுப்பூசியை பெற்றுகொள்ள வேண்டும் என குவிகின்றனர். இதனால் அங்கும் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.இதற்கிடையே மும்பையில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 26 லட்சமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு டோஸ் மட்டும் போட்டவர்கள் எண்ணிக்கை 71 லட்சம் ஆகும்.

இந்த ஆண்டு அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் 4-ந் தேதி அன்று நகரில் 11 ஆயிரத்து 163 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதேநேரம் தொற்றுநோய் இரண்டாவது அலையின்போது மே 1-ந் தேதி அன்று அதிகபட்சமாக 90 இறப்புகள் பதிவானது.

Next Story