மும்பையில் ரத்த தானம் பெற்ற 8 மாத குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பு


மும்பையில் ரத்த தானம் பெற்ற 8 மாத குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பு
x
தினத்தந்தி 3 Sep 2021 1:58 AM GMT (Updated: 3 Sep 2021 1:58 AM GMT)

ரத்த தானம் பெற்ற 8 மாத குழந்தைக்கு எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ரத்த தானம்
அகோலா மாவட்டத்தை சேர்ந்த 8 மாத பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. விசாரணையில், சமீபத்தில் அவர் ரத்த தானம் பெற்றதில் அந்த குழந்தைக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-
குழந்தையின் உடல்நிலை சமீபத்தில் சரியில்லாமல் போனது. பரிசோதனையில் குழந்தைக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து உள்ளூர் டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் அகோலாவில் உள்ள ரத்த வங்கியில் இருந்து அவளுக்கு ரத்தம் வழங்கப்பட்டது. இதனை குழந்தைக்கு செலுத்தியதும் அவள் குணமடைந்தாள். ஆனால் பின்னர் அவள் அடிக்கடி நோய்வாய்பட ஆரம்பித்தாள்.

எச்.ஐ.வி. பாதிப்பு
இதைதொடர்ந்து குழந்தையை அமராவதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு நடத்திய பரிசோதனையில் அவளுக்கு எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதைதொடர்ந்து குழந்தைக்கு நோய் பாதிப்பு எப்படி வந்தது என கண்டறிய பெற்றோருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்களுக்கு நோய் பாதிப்பு இல்லை. எனவே ரத்தம் ஏற்றியதன் மூலம் குழந்தைக்கு எச்.ஐ.வி. வந்தது தெரியவந்துள்ளது.

அரசு உத்தரவு
அதிர்ச்சி அளிக்கும் இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சுகாதார துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறுகையில், "நான் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். இந்த கவனக்குறைவு சிறுமியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தவறு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது" என்றார்.

Next Story