“கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது” - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை


“கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது” - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
x
தினத்தந்தி 3 Sep 2021 10:45 PM GMT (Updated: 3 Sep 2021 10:45 PM GMT)

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிறது. இந்த 60-வது ஆண்டு விழா மற்றும் விபத்துகள் இல்லாமல் பஸ்களை ஓட்டிய டிரைவருக்கு முதல்-மந்திரியின் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி பெங்களூரு விதானசவுதாவில் நேற்று காலையில் நடைபெற்றது.

இதில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு போக்குவரத்து கழகத்தின் 60-வது ஆண்டு விழாவை தொடங்கி வைத்தார். மேலும் சிறந்த டிரைவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களை அவா் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது;-

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அது மீண்டும் லாபகராக செயல்பட தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நஷ்டத்தில் இயங்கும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தை மீட்க நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

அந்த குழுவில் இடம் பெறும் நிபுணர்கள், போக்குவரத்து கழகத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள், பிற மாநிலங்களை சேர்ந்த போக்குவரத்து அதிகாரிகள், சர்வதேச அளவில் கூட அதிகாரிகளை வேண்டுமானாலும் சந்தித்து பேசி, தேவையான தகவல்களை திரட்டி கொள்ளலாம்.

அந்த நிபுணர்கள் குழுவினர் 4 மாதத்திற்குள் கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தை மீட்டெடுப்பதற்கான அறிக்கையை அரசிடம் அளிக்க வேண்டும். பட்ஜெட்டுக்கு முன்பாக ஆலோசித்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தை மீட்க நிதி உதவி உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதல்-மந்திரியாக நானும், அரசு போக்குவரத்து கழகத்தை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். நாட்டிலேயே சிறந்த தொழில் நுட்ப வசதிகளுடன் நமது போக்குவரத்து கழகம் இருக்கிறது.

கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்கள் மிகவும் பாதுகாப்பானவை. பாதுகாப்பும், தொழில் நுட்ப வசதிகளை கொண்ட போக்குவரத்து கழகம் என்ற பெயரை கர்நாடக போக்குவரத்து கழகம் எடுத்திருந்தது. அதனை மீட்டெடுப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Next Story